காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் வீட்டு சுவரில் எழுதிவிட்டு ஈரோடு அருகே இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்துவருகின்றன. ஐபிஎல் போட்டியை சென்னையில் நடத்த எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தேசிய அளவிலான கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில், இன்று சென்னை வந்துள்ள பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு கொடி காட்டி ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தப்பட்டன. இவ்வாறு காவிரி மேலாண்மை வாரியத்திற்காக போராட்டங்கள் வலுத்துவருகின்றன.

இந்த நிலையில், ஈரோடு அருகே உள்ள சித்தோடையை சேர்ந்த தர்மலிங்கம் என்ற இளைஞர், தன் வீட்டு சுவரில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் எழுதிவைத்துவிட்டு, தீக்குளித்தார். ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த இளைஞர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.