ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் கனமழை காரணமாக கீரிப்பள்ளம் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருகில் உள்ள 1000-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளம் பாதித்த பகுதியை கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வேட்டியை மடித்துக்கட்டி நேரில் பார்வையிட்டார். 

வடகிழக்கு மழை தொடங்க உள்ள நிலையில் ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம் நம்பியூர், கலிஞ்சியம் உள்ளிட்ட இடங்களில் ஏரி, குளம் நிரம்பியது. கீரிப்பள்ளம் ஓடை வழியாக தடப்பள்ளி வாய்க்காலைச் சென்றடையும் இந்த நீர், ஓடையை முறையாக தூர்வாராததால் வெள்ள நீர் ஊருக்குள் புகுந்தது.

மார்க்கெட், பேருந்து நிலையம், கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் இருந்த வீடு, கடைகளில் வெள்ளம் புகுந்தது. மேலும் அப்பகுதியில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். 1000-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளநீர் புகுந்ததால், வீடுகள், கடைகளில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்துள்ளன. 

இந்நிலையில் வெள்ளம் பாதித்த பகுதியை அமைச்சர் செங்கோட்டையன் ஆய்வு செய்தார். பிறகு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். கீரிப்பள்ளம் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் அகற்றப்படும் என்றும் உறுதிப்பட தெரிவித்தார்.