கூட்டணியை ஒரு ஓரமாக ஒதுக்கிவைத்துவிட்டு தமிழகத்தில உள்ள 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார்.

பொதுவாக அதிமுக – திமுக வேட்பாளர் தேர்வில் மிக முக்கியமான காரணியாக இருக்க கூடியது வேட்பாளர்களின் ஜாதி, பண பலம் தான். தொகுதிக்கு தகுந்தவாறு அதிக வாக்காளர்களை கொண்ட ஜாதியை சேர்ந்தவர்களை வேட்பாளர்களாக தேர்வு செய்வது தான் திமுக ?- அதிமுக ஆகிய கட்சிகளின் வழக்கம். அந்த வகையில் கொங்கு மண்டலம் என்றால் கவுண்டர்களுக்கும், வடக்கு மாவட்டங்கள் என்றால் வன்னியர்களுக்கும், தென் மாவட்டங்கள் என்றால் நாடார்களுக்கும், தேவர்களுக்கும் வேட்பாளர் பட்டியலில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

இந்த நிலையில் ஜெயலலிதா – சசிகலா இருந்த வரை அதிமுக தேவர்களுக்கான கட்சியாக கருதப்பட்டது. அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தொடங்கி அதிக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் முக்குலத்தோர் சமுதாயததை சேர்ந்தவர்களாகவே இருப்பர். ஆனால் சசிகலா சிறை சென்று அதிமுக எடப்பாடி பழனிசாமி வசம் வந்த பிறகு அந்த கட்சி கவுண்டர்களுக்கான கட்சியாக  மாறிவிட்டது என்று ஒரு விமர்சனம் உண்டு. ஏன் முதலமைச்சர் கவுண்டர்களுக்கு அதிகம் செய்கிறார் என்று முக்கிய அமைச்சர் ஒருவர் அண்மையில் பிரச்சனை செய்ததாக கூட தகவல் வெளியானது.

ஆனால் தேர்தல் நெருங்கும் சூழலில் தான் அனைத்து சமுதாயத்திற்கும் பொதுவானவன் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எடப்பாடி பழனிசாமிக்கு ஏற்பட்டு உள்ளது. மேலும் கவுண்டர்களுக்கு மட்டும் அல்ல அனைத்து சமுதாயத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் அதிமுகவில் வழங்கப்படும் என்பதை தெரியப்படுத்தவேண்டிய அவசியமும் முதலமைச்சருக்கு ஏற்பட்டுள்ளது. உளவுத்துறையும் இதனை வழிமொழிந்துள்ளதாக சொல்கிறார்கள். அந்த வகையில் குறிப்பிட்ட சில தொகுதிகளில் அதுவும் கொங்கு பெல்டில் கவுண்டர்களை தவிர்த்து வேறு சில சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க முதலமைச்சர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் தனித் தொகுதி தவிர மற்ற தொகுதிகளில் காலம் காலமாக கவுண்டர்களுக்கு மட்டுமே சீட் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த முறை அதனை மாற்றி இரண்டு தொகுதிகளை வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு ஒதுக்க  எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார். அதிலும் குறிப்பாக ஈரோட்டில் கணிசமாக வசிக்க கூடிய முதலியார், நாடார், வன்னியர் சமுதாயங்களை சேர்ந்த யாராவது ரெண்டு பேருக்கு மாவட்டத்தில் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவது குறித்து எடப்பாடி பழனிசாமி யோசித்து வருகிறார்.

அந்த வகையில் ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ தென்னரசு தனது பெயரை முழுவதுமாக தொகுதியில் டேமேஜ் செய்து வைத்துள்ளார். எனவே அந்த தொகுதியில் வேறு வேட்பாளருக்கு தான் இந்த முறை வாய்ப்பு. தற்போது ஈரோடு மாநகர் மாணவரணி  மாவட்ட இணைச் செயலாளராக உள்ள என். நந்தகோபால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான உளவுத்துறையின் வேட்பாளர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். செங்குந்த முதலியார் சமுதாயத்தை சேர்ந்த இவர் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகிய இருவரின் குட்புக்கில் உள்ளார்.

எதிர்த்து யார் நின்றாலும் தலைமையே எதிர்பார்க்காத அளவிற்கு செலவு செய்ய நந்த கோபால் தயார். கட்சிக்காரர்கள் மத்தியிலும் இவருக்கு நல்ல பெயர் இருக்கிறது. நலத்திட்டம் சார்ந்த செயல்பாடுகளால் பொதுமக்கள் மத்தியிலும் நந்தகோபாலுக்கு நல்ல அறிமுகம் உள்ளது. ஈரோட்டை பொறுத்தவரை எம்எல்ஏ ஆக வேண்டும் என்றால் தொழில் அதிபர்கள், வேளாண் பெருங்குடி மக்களின் ஆதரவு முக்கியம். அந்த இரண்டுமே நந்தகோபாலுக்கு உண்டு. மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2011ம் ஆண்டு முதலியார் சமுதாயத்தை சேர்ந்த சந்திரகுமார் தேமுதிக சார்பில் போட்டியிட்டு வென்றுள்ளார். எனவே நந்தகோபாலுக்கு ஈரோடு கிழக்கு ஒதுக்கப்பட்டால் அவர் சார்ந்த செங்குந்த முதலியார் சமுதாயம் முழு அளவில் ஆதரிக்கும் என்கிறார்கள். எனவே இந்த முறை ஈரோடு கிழக்கு அதிமுக வேட்பாளர் நந்தகோபால் தான் என்று மாவட்ட அதிமுகவில் தற்போதே பேச்சுகள் அடிபடுகின்றன.

இதே போல் ஈரோடு மேற்கு தொகுதி எம்எல்ஏவான கே.வி.ராமலிங்கம் வேறு தொகுதிக்கு செல்ல முடிவெடுத்துள்ளார். எனவே இந்த தொகுதியிலும் கவுண்டர் அல்லாத அதே சமயம் தொகுதியில் கணிசமாக உள்ள நாடார் சமுதாயத்தை சேர்ந்தவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள். பெருந்துறையை பொறுத்தவரை தோப்பு வெங்கடாசலத்திற்கு மறுபடியும் சீட் இல்லை என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியுடன் உள்ளார். அதே சமயம் பெருந்துறையில் தோப்பு வெங்கடாசலத்திற்கு எதிராக களம் இறக்கப்பட்ட ஜே.கே.என்கிற ஜெயக்குமார் மீது உளவுத்துறை கொடுத்துள்ள ரிப்போர்ட் அவ்வளவு திருப்தி இல்லை என்கிறார்கள்.

மேலும் ஜெயக்குமார் நிறுத்தப்பட்டால் தோப்பு வெங்கடாசலம் உள்ளடி வேலைகளை பார்ப்பார் என்கிறார்கள். எனவே பெருந்துறையில் தோப்பு வெங்கடாசலம் மற்றும் ஜெயக்குமாருக்கு பொதுவான ஒன்றிய இளைஞர் அணிச் செயலாளரான வைகை தம்பி என்கிற ரஞ்சித் ராஜ் அதிமுக வேட்பாளராக வாய்ப்பு உருவாகியுள்ளது. அதோடு உளவுத்துறையும் ரஞ்சித் ராஜூக்கு சாதகமாக ரிப்போர்ட் கொடுத்துள்ளதால் வேட்பாளர் ரேசில் முதலிடத்திற்கு வந்துள்ளார். செயல் வீரராக பார்க்கப்படும் ரஞ்சித் ராஜ் குறித்த உளவுத்துறையின் ரிப்போர்ட்டும் மற்றவர்களை ஒப்பிடுகையில் டாப். இளைஞர், தோப்பு வெங்கடாசலத்தின் உள்ளடி வேலைகளை எதிர்கொள்ளும் பணபலம் போன்றவை வைகை தம்பியை பெருந்துறை அதிமுக வேட்பாளர் ஆக்கும் என்பதில் சந்தேகம் இல்லையாம்.

இப்படி ஈரோடு மாவட்டம் மட்டும் இல்லாமல் தென் மாவட்டங்களிலும் கூட காலம் காலமாக குறிப்பிட்ட சில சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே வேட்பாளர்களாக அறிவிக்கப்படும் நிலையை மாற்றி சில புதுமைகளை செய்ய எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளாராம்.