மிக லேசாக பேச்சுத் திறன் வந்துவிட்ட விஜயகாந்தை பார்த்து அவரது தொண்டர்கள் “ நீங்க பழைய பன்னீர்செல்வமாக வரணும் கேப்டன்!” என்று கூக்குரல் கொடுக்கிறார்கள். ஆனால், அ.தி.மு.க.வில் எடப்பாடியார் அணியோ,  ஓ.பி.எஸ்.ஸை பார்த்து ‘நீங்க பழைய பன்னீர்செல்வமா வந்துடாதீங்க!’ என்று கதறுகிறார்கள். 

என்ன கூத்து இது?....இதை விளக்கும் விமர்சகர்கள்... ”அதாவது தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஜெயலலிதாவின் சமாதியில் தியானம் செய்த ஓ.பன்னீர்செல்வம் ‘தர்மயுத்தம்’ எனும் பெயரில் அ.தி.மு.க.வில்  தன் தலைமையில் புதிய அணியை உருவாக்கினார். இவர்கள் முழுக்க முழுக்க சசிகலா தலைமையினை எதிர்த்தும், அவர் சிறை சென்ற பின், அவரால் நியமிக்கப்பட்ட எடப்பாடியாரை எதிர்த்தும் கடும் அரசியல் செய்தார். 

அதிலும், சசி சிறை சென்றதும் முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடியார் தனது ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார். அதில் பன்னீர் உள்ளிட்ட அவருக்கு ஆதரவான எம்.எல்.ஏ.க்கள் ஆட்சிக்கு எதிராக வாக்களித்தனர். அதாவது 11 வாக்குகள் எதிராக விழுந்தன. ஆனாலும் ஆட்சி தப்பியது. ஆனால் அதன் பின் இரு அணிகளும் இணைந்துவிட்டன. 

இந்த நிலையில், அரசுக்கு எதிராக வாக்களித்த 11 பேரையும் தகுதி நீக்க செய்ய வேண்டும் என்று, தி.மு.க.வின் சட்டமன்ற கொறடா சக்கரபாணி ஒரு வழக்கு தாக்கல் செய்தார். இதை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால், உச்சநீதிமன்றம் போனார். இந்த வழக்கு இப்போது டாப் கியருக்கு மாறியுள்ளது. பதினெட்டு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு போல் இதுவும் அ.தி.மு.க.வுக்கு சாதகமான தீர்ப்பை பெறும்! என்று  அ.தி.மு.க.வினராலேயே முழுக்க முழுக்க நம்பமுடியவில்லை. காரணம் சமீப கால நீதிமன்ற சூழல்கள் அப்படியுள்ளன. 

மேலும் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி விஷயத்தில் பா.ஜ.க.வின் முடிவு என்னவென்று தெரியவில்லை. மோடியை பாராட்டிக் கொண்டே பா.ஜ.வை தி.மு.க. நெருங்கி வருவதால், ஒரு வேளை கூட்டணி மாறலாம். அதற்கு தோதாக இந்த ஆட்சியை வழக்கின் மூலம் கலைக்கும் முடிவை பா.ஜ.க. எடுக்கலாம். அதன் பின், ‘உங்களுக்கு மக்கள் செல்வாக்கில்லை என கழட்டி விடலாம்’. இதுதான் அ.தி.மு.க.வின் திக் திக் பயத்துக்கு காரணம்.” என்று நிறுத்தினர். ஓ! இதனால்தான் ஓ.பி.எஸ்.ஸை ‘பழைய பன்னீர்செல்வமாக அந்த தீர்ப்பில் வந்துடாதீங்கண்ணே!’ என்று கதறுகின்றார்களோ அ.தி.மு.க.வினர்!