ஓபிஎஸ் அணிக்கு தாவிய மைத்ரேயன்..! அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கிய இபிஎஸ்
அதிமுக அமைப்பு செயலாளராக இருந்த மைத்ரேயன் நேற்று ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்த நிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மண்டபத்தில் மாற்றுக் கட்சியிலிருந்து ஆயிரத்திற்கு மேற்பட்டோர் ஓபிஎஸ் அணியில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஈபிஎஸ் அணியில் இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் தற்போது ஓபிஎஸ் அணியில் இணைந்தார். அப்போது பேசிய மைத்ரேயன், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசியல் வாரிசு ஓபிஎஸ். 2017 ஆம் ஆண்டு அண்ணன் ஓபிஎஸ் அவர்கள் தர்மயுத்தம் தொடங்கிய போது அவருடன் இருந்தேன். யானைக்கும் அடி சறுக்கும். எனக்கு புத்தி பேதலித்து போனது வேலியை தாண்டிய வெள்ளாடாக மாறினேன். இபிஎஸ் அணியில் சேர்ந்து 108 நாட்களில் மீண்டும் ஓபிஎஸ் அணிக்கு திரும்பி உள்ளேன். அனைவரையும் ஒருங்கிணைத்து கட்சியை வழிநடத்தும் திறமை அண்ணன் ஓபிஎஸ் மட்டும்தான்’ என்று பேசியிருந்தார்.
இந்தநிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், டாக்டர் வா. மைத்ரேயன், Ex. M.P., கழக அமைப்புச் செயலாளர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்வதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.