கொடியேற்றத்துடன் தொடங்குகிறது அதிமுக மாநில மாநாடு..! மதுரையில் குவிந்த லட்சக்கணக்கான தொண்டர்கள்
அதிமுக மாநாடு இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறவுள்ள நிலையில், லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் கொடியேற்றத்துடன் மாநாட்டை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்கிறார்.
அதிமுகவின் பிரம்மாண்ட மாநாடு
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் அதிகார மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி என 4 பிரிவாக அதிமுக பிளவுபட்டது. இந்தநிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து தனது பலத்தை பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் நிரூபிக்கும் வகையில் மாநாடு நடத்த திட்டமிட்டார்.இதற்காக ஆகஸ்ட் 20 ஆம் தேதியை மாநாடு நடத்த திட்டமிட்டு மதுரையில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. சுமார் 4 மாதங்களாக மாநாடு பணி நடைபெற்ற நிலையில், இன்று மதுரையில் மாநாடு கோலகலமாக தொடங்கியுள்ளது.
மதுரையில் குவிந்த தொண்டர்கள்
இதற்காக தமிழகம் முழுவதில் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் மதுரையில் குவிந்துள்ளனர். இதற்காக சென்னையில் இருந்து சிறப்பு ரயிலும் இயக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் மதுரையை முற்றுகையிட்டுள்ளதால் மதுரையே ஸ்தம்பித்துள்ளது. மதுரை அருகேயுள்ள வலையங்குளத்தில் நடைபெறும் மாநாட்டுக்கான மேடை, பந்தல், சுமார் 10 லட்சம் பேருக்கு உணவு வழங்கும் இடம், கழிப்பறைகள், வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்டவைகள் சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மாநாட்டுப் பந்தல் வளாகத்தில் 3 லட்சம் தொண்டர்கள் நாற்காலிகளில் அமரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணிக்கு 51 அடி உயர கொடிக் கம்பத்தில் பொதுச் செயலாளர் பழனிசாமி கட்சிக் கொடியேற்றி, மாநாட்டை தொடங்கி வைத்தார்.அப்போது ஜெயலலிதா பேரவை மற்றும் பிற அணிகளின் தொண்டர்கள் சுமார் 3,000 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.
மாநாட்டு பந்தலை திறந்த வைத்த இபிஎஸ்
இதனை தொடர்ந்து மாநாட்டுப் பந்தலைத் திறந்துவைக்கும் எடப்பாடி பழனிசாமி, நுழைவுவாயில் அருகே அமைக்கப்பட்டுள்ள அதிமுக அரசின் சாதனைகள் குறித்த புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்டு வருகிறார். இதனை தொடர்ந்து, கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. மேலும் மாநாட்டில் முக்கிய நிகழ்வான எடப்பாடி பழனிசாமி மாலை 6 மணி அளவில் உரையாற்றவுள்ளார்.
இதையும் படியுங்கள்
அதிமுக மாநாடு வெற்றி பெறணும்! மீண்டும் முதல்வராக இபிஎஸ் வரணும்! பால்குடம் எடுத்து வழிபட்ட பெண்கள்.!