ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.! கூடுதலாக 11 பேர் பொறுப்பாளராக நியமனம்- அதிரடியாக களத்தில் இறங்கிய ஈபிஎஸ்
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக வேட்பாளர்கள் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், ஏற்கனவே செங்கோட்டையன் தலைமையில் 102 பேர் கொண்ட பணிக்குழு பொறுப்பாளர்களை எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ள நிலையில், தற்போது கூடுதலாக 11 பேர் கொண்ட பொறுப்பாளர்களை அறிவித்துள்ளார்.

ஈரோடு இடைத்தேர்தல்- அதிமுக தீவிரப் பணி
ஈரோடு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பால் காலமானார். இதனையடுத்து அந்த தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பாக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகள் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தவுள்ளனர். இதன் காரணமாக இரட்டை இலை சின்னம் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் பொறுப்பு குழு தலைவராக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார். இதனையடுத்து தேர்தல் பொறுப்பாளர்களாக முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள் என 100 நிர்வாகிகளின் கொண்ட பட்டியலை வெளியிட்டார்.
தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்
இந்தநிலையில் தற்போது கூடுதலாக 11 பேர் கொண்ட பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதில் முன்னாள் எம்பி, டாக்டர் K.கோபால், முன்னாள் அமைச்சர் வளர்மதி, மாஃபா. பாண்டியராஜன், உள்ளிட்ட 11 பேர் இடம் பெற்றுள்ளனர். அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு, கழக நிர்வாகிகளும், ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் முழு ஒத்துழைப்பு நல்கிட, வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். சிறப்பான முறையில் தேர்தல் பணிகளை ஆற்றி, கழக வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக எடப்பாடி பழனிசாமி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்