Asianet News TamilAsianet News Tamil

வீட்டு வரி, சொத்து வரி உயர்த்தியது மட்டுமில்லாமல் அபராத வரியும் விதிப்பா.? திமுக அரசுக்கு எதிராக சீறும் இபிஎஸ்

வீட்டு வரி, சொத்து வரியை கடுமையாக உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், காலதாமதமாக வரி செலுத்துவோருக்கு 1 சதவீதம் அபராதத் தொகையையும் வசூலிக்கும் தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 

EPS condemns the Tamil Nadu government for not only increasing house tax and property tax but also levying penalty tax KAK
Author
First Published Oct 6, 2023, 10:37 AM IST

புதிதாக அபராத வரி- இபிஎஸ் எதிர்ப்பு

திமுக அரசால் புதிதாக விதிக்கப்பட்டுள்ள 1 சதவீத அபராதக் கட்டணத்தை ரத்து  செய்ய கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசு பதவியேற்ற கடந்த 29 மாதங்களாக, மக்கள் மீது சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் மற்றும் பால் பொருட்களின் விலை உயர்வு, அனைத்து அத்தியாவசிய மளிகைப் பொருட்களின் விலை உயர்வுகள், கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வுகள் உள்ளிட்ட கட்டண உயர்வுகள் மூலம் மென்மேலும் மக்களை துன்புறுத்தி வருகிறது. மேலும், மூலப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக அனைத்துத் தொழில் துறையினரும் மிகவும் பாதிக்கப்பட்டு தொழில் முனைவோர்கள்,

EPS condemns the Tamil Nadu government for not only increasing house tax and property tax but also levying penalty tax KAK

மக்களை வாட்டி வதைக்கும் அரசு

தொழிலாளர் குடும்பங்கள் வேலை வாய்ப்பின்மை மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்து தங்களது வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். இந்நிலையில் தற்போது, தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நடப்பு நிதியாண்டில் (2023-2024) முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணைகளை, மாநகராட்சி எல்லைக்குள் வசிக்கும் மக்கள் காலதாமதமாக வரி செலுத்தினால், 1 சதவீதம் அபராதத் தொகை வசூலிக்கப்படும் என்று சட்டம் கொண்டுவந்து மக்களை மேலும் வாட்டி வதைக்கும் விடியா திமுக அரசின் இச்செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திரு. ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, வரி உயர்வுக்காக பதாகைகளை ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், 2021, சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் "கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மீண்டும் மேம்படும் வரையில் சொத்து வரி உயர்த்தப்பட மாட்டாது" என வாக்குறுதி அளித்துவிட்டு தற்போது வரியை உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், தாமதத்திற்கு 1 சதவீதம் அபராதமும் விதிக்கப்படுகிறது. ஆகவே, இந்த விடியா திமுக அரசின் இரட்டை வேடத்தை தமிழக மக்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.

EPS condemns the Tamil Nadu government for not only increasing house tax and property tax but also levying penalty tax KAK

அபராத வரியை ரத்து செய்யுங்கள்

கொரோனா கால பேரிடரில் இருந்து தமிழக மக்கள் இன்னும் முழுமையாக மீண்டு வராத நிலையில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில், வரி உயர்வுகளாலும், விலைவாசி உயர்வுகளாலும், தொழில் துறை முடக்கம், வேலையின்மை காரணமாகவும், பொதுமக்கள் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்புக்கு உள்ளாகி, மன உளைச்சலால் மக்கள் விரோத விடியா அரசை எதிர்த்துப் போராடும் மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனது தலைமையிலான அம்மா அரசில், கொரோனா பேரிடர் காலத்தில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்ட நிலையிலும். மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் தங்களது குடும்பங்களில் பொருளாதார இடர்ப்பாடுகளை சந்தித்த நேரத்திலும், 

அவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு எந்தவித வரி உயர்வுகளும், கட்டண உயர்வுகளும் மக்கள் மீது திணிக்காமல் காத்து நின்றது. ஏற்கெனவே, பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ள பொதுமக்களின் மனநிலையை அறிந்து, அவர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, தற்போது விடியா திமுக அரசால் புதிதாக விதிக்கப்பட்டுள்ள 1 சதவீத அபராதக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டியும், உயர்த்தப்பட்ட வரி உயர்வுகளை குறைக்க எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் கோரிக்கையை உதாசீனப்படுத்தி, சர்வாதிகார மனப்பான்மையோடு மறுபரிசீலனை செய்யாத விடியா திமுக அரசை வன்மையாகக் கண்டிப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

இரண்டு நாளில் திருமண நிச்சயதார்த்தம்..! அதிமுக ஐடி விங் நிர்வாகி திடீர் கைது- போலீசாருடன் வாக்குவாதம்

Follow Us:
Download App:
  • android
  • ios