அதிமுக ஆட்சியில் தொடங்கிய திட்டங்களுக்கு திமுக அரசு தனது சாதனைகள் போல் கூறிவருவதற்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
அதிமுக திட்டத்திற்கு திமுக பெயர்?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்று 10 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில், தற்போது திறந்துவைக்கப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட திட்டம் என்றும் அந்த திட்டங்களை முழுமையாக அதிமுக அரசு முடித்து வைத்திருந்த நிலையில் அந்த திட்டங்களை தங்களது திட்டங்களை போல திமுக அரசு செயல்படுத்தி வருவதாக அதிமுக குற்றம்சாட்டியிருந்தது. இதற்கு திமுகவோ, அதிமுக திட்டங்களை தொடங்க மட்டும் தான் செய்தது என்றும் திட்டத்தை முடிக்காமல் சென்றதாகவும் அந்த பணிகளை விரைவுபடுத்ததி திட்டங்களை செயல்படுத்தியது திமுக என கூறிவருகின்றன.

திமுகவிற்கு கண்டனம்
இந்தநிலையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ஆப்பிள் ஐபோன்களை தயாரிக்கும் பணிகளுக்கான ஒப்பந்தம் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் வழக்கம் போல் இதையும் தங்கள் சாதனை போல காட்டி கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயலுவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இந்த திட்டம் மேட் இன் தமிழ்நாடு தான்.. ஆனால் மேட் இன் அம்மா அரசு என அதில் குறிப்பிட்டுள்ளார். தனது தலைமையிலான அதிமுக ஆட்சியில் 2019 ஆம் ஆண்டே ஒப்பந்தம் போடப்பட்டு 2020 ஆம் ஆண்டு பாக்ஸ்கான் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்பை சென்னையில் தொடங்கிவிட்டதாக அந்த டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
