தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் பேசியதாகவும், தங்களுடைய பதிலில்  ஆளுநர் திருப்தி அடைந்ததாகவும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி தெரிவித்துள்ளார்.

காவிரி பிரச்சினையில், உச்சநீதிமன்றத்தின்  தீர்ப்பை அமல்படுத்துவதற்கு காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. இதனைக் கண்டித்து, தமிழகம் போராட்ட களமாக மாறி வருகிறது. ஸ்டெர்லைட்டுக்கு எதிராகவும் தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது.

இந்தநிலையில் ஆளுநர் பன்வாரிலாலை ராஜ்பவனில் முதலமைச்சர்  பழனிசாமி சந்தித்து பேசினார். அவருடன் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்  அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி  பழனிசாமி, தமிழகத்தில் நடைபெறும் போராட்டங்கள் குறித்து ஆளுநருடன் பேசியதாக தெரிவித்தார். 

மேலும் ஆளுநரிடம்  எங்களுடைய பதிலை தெரிவித்தோம். ஆளுநர் எங்களுடைய விளக்கத்தில் திருப்தி அடைந்தார். பதில் திருப்தியாக இருப்பதாக தெரிவித்தார் என கூறினார்.

தண்ணீர் பிரச்சனை பற்றியும் நாங்கள் பேசினோம். எங்களுடைய கருத்துக்களை மிகவும் உன்னிப்பாக கவனித்தார். காவிரி நீர் பிரச்சனை தொடர்பாக நடைபெறும் போராட்டம் தொடர்பாகவும் பேசினோம். உரிய பதிலை தெரிவித்தோம். தமிழக நிலவரம் தொடர்பாக அவரிடம் எடுத்துரைத்தோம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.