அரசைக் கவிழ்ப்போம் என்று கொக்கரிக்கிறார்கள். அத்தகையவர்களின் கயமையை வேரோடு வீழ்த்தி, நான்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் கடைசி நொடி வரை இடையறாது பணியாற்ற வேண்டும் என அதிமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர், பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் கடிதம் எழுதியிருக்கிறார்கள். 
இதுதொடர்பாக அவர்கள் எழுதியுள்ள கடிதம்:
மே 19 அன்று நடைபெற உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுகவும் அமமுகவும் கைகோர்த்துள்ளன. இதுவரை போட்டியிருந்த தங்களுடைய முகமூடியைக் கிழித்து விட்டு, அதிமுக ஆட்சியைக் கலைப்போம் என்ற ஒருமித்த குரலோடு நம் முன்னே வந்து நிற்கிறார்கள். அதிமுக தொண்டர்களின் உதிரத்தையும் உழைப்பையும் உறிஞ்சி கொழுத்தவர்கள், இன்று விரோதிகளோடு சேர்ந்து அம்மாவின் அரசை வீழ்த்துவோம் என்று கொக்கரிக்கிறார்கள்.
அதிமுகவை ஒழிக்க நினைத்தவர்கள், ஒரு நாளும் காலுான்றி நிலைத்ததில்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்க வேண்டும். அவர்களை தேர்தலில் வென்றாக வேண்டும். அம்மாவின் அரசை அழிப்போம் என்று கொக்கரிக்கிற கயமையை வேரோடு வீழ்த்த வேண்டும். அதற்கு நான்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக  வெல்ல வேண்டும். அந்த வெற்றிக்காக ஓட்டுப்பதிவின் கடைசி  நொடிவரை இடையறாது தொண்டர்கள் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் தெரிவித்திருக்கிறார்கள்.