புதிய குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் நானை பதவியேற்கிறார். இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது. இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்ம் கலந்து கொள்கின்றனர்.

இந்தியாவின்  14வது குடியரசுத் தலைவராக  ராம்நாத் கோவிந்த் நாளை பதவியேற்கிறார். இதற்காக டில்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைவதைத் தொடர்ந்து, புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் நாளை பதவியேற்க உள்ளார். 

நாளை காலை ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் ராணுவ அணிவகுப்புடன் நாடாளுமன்றத்திற்கு அவர் அழைத்து வரப்படுவார்.

அங்கு பிரதமர் மோடி உட்பட அனைத்துக் கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் அவரை வரவேற்பார்கள்.

பின்னர், உச்சநீதிமன்ற  தலைமை நீதிபதி கெஹர், புதிய குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்திற்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். பதவியேற்புக்குப் பின்னர் அவர் ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்துச் செல்லப்படுவார்.

நாட்டின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் நாளை பதவியேற்கும் இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர்  பழனிசாமி இன்று  மாலை டெல்லி செல்கிறார்.

இதே போன்று இந்த விழாவில் பங்கேற்பதற்காக ஓபிஎஸ் டெல்லி சென்றுள்ளார். அவர் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பார் என கூறப்படுகிறது.