Asianet News TamilAsianet News Tamil

எந்த வகையில் நியாயம்? இது சமூக நீதிக்கு எதிரானது.. ஸ்டாலின் மீது பாயும் ராமதாஸ்..!

கல்லூரி மாணவர் சேர்க்கைக்கே நுழைவுத் தேர்வு நடத்தக் கூடாது என்று வலியுறுத்தும் திமுக அரசு, 11ஆம் வகுப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்த ஆணையிடுவது எந்த வகையில் நியாயம்? சமூக நீதிக்கு எதிரான இத்தேர்வை எப்படி ஏற்க முடியும்?

Entrance Exam for 11th class? As against social justice... Ramadoss
Author
Tamil Nadu, First Published Jun 9, 2021, 1:14 PM IST

கல்லூரி மாணவர் சேர்க்கைக்கே நுழைவுத் தேர்வு நடத்தக் கூடாது என்று வலியுறுத்தும் திமுக அரசு, 11ஆம் வகுப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்த ஆணையிடுவது எந்த வகையில் நியாயம்? என ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 11ஆம் வகுப்பில் சேர, அனுமதிக்கப்பட்ட இடங்களை விட, அதிக எண்ணிக்கையில் மாணவ, மாணவியர் விண்ணப்பித்திருந்தால், அவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடத்தி, அதில் அவர்கள் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வி ஆணையர் அறிவித்திருக்கிறார். இது சமூக நீதிக்கு எதிரானது.

Entrance Exam for 11th class? As against social justice... Ramadoss

தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட இடங்களை விடக் கூடுதலாக 10 முதல் 15% மாணவர்களைச் சேர்க்கலாம். அனுமதிக்கப்பட்ட இடங்களுக்கு இணையாகவோ, அதைவிடக் குறைவாகவோ விண்ணப்பம் பெறப்பட்டால், நுழைவுத் தேர்வின்றி மாணவர்களுக்கு அவர்கள் விரும்பும் பிரிவை ஒதுக்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. ஏதேனும் ஒரு பாடப்பிரிவுக்கு அனுமதிக்கப்பட்ட இடங்களை விட அதிக மாணவர்கள் விண்ணப்பித்தால், சம்பந்தப்பட்ட பாடத்தில் 50 வினாக்களைக் கொண்ட, சரியான விடையைத் தேர்வு செய்யும் முறையிலான, நுழைவுத் தேர்வை சம்பந்தப்பட்ட பள்ளி அளவில் நடத்தி, மாணவர்களைத் தேர்ந்தெடுக்கலாம் எனப் பள்ளி நிர்வாகங்களுக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையர் ஆணையிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட எந்தப் பட்டப்படிப்புக்கும் நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படக் கூடாது என்பதுதான் தங்களின் கொள்கை என்று திமுக அரசு அறிவித்திருக்கிறது. ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றும் தேர்தலின்போது வாக்குறுதி அளித்தது. தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு நடத்தப்படவில்லை என்றாலும் கூட, கல்லூரிகளுக்கு நுழைவுத்தேர்வு அடிப்படையில் மாணவர்களை சேர்க்க அனுமதிக்க மாட்டோம் என்று முதல்வர் ஸ்டாலின் இரு நாட்களுக்கு முன்புதான் அறிவித்திருந்தார். கல்லூரி மாணவர் சேர்க்கைக்கே நுழைவுத் தேர்வு நடத்தக் கூடாது என்று வலியுறுத்தும் திமுக அரசு, 11ஆம் வகுப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்த ஆணையிடுவது எந்த வகையில் நியாயம்? சமூக நீதிக்கு எதிரான இத்தேர்வை எப்படி ஏற்க முடியும்?

Entrance Exam for 11th class? As against social justice... Ramadoss

தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கில் மார்ச் 22/2021 அன்று சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் அடிப்படையில்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது மாணவர்களை ஏமாற்றும், திசை திருப்பும் செயலாகும். தமிழக அரசு சுட்டிக்காட்டும் வழக்கு என்பது 9, 10, 11 ஆகிய வகுப்புகளுக்கான தேர்வுகளை ரத்து செய்துவிட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக வெளியிடப்பட்ட அறிவிப்பை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு ஆகும்.

9, 10, 11ஆம் வகுப்பு மாணவர்களின் திறனை சோதிக்க பள்ளி அளவில் சிறிய தேர்வு நடத்தி, அதனடிப்படையில்தான் தேர்ச்சி வழங்கப்பட வேண்டும் என்ற தனியார் பள்ளிகளின் கோரிக்கையை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. அப்படியானால், 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கையின்போது அவர்களின் திறனை சோதிக்க சில வினாக்களைக் கேட்டு, அதனடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகள் கோரியபோது, அதை ஆன்லைனிலோ, நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டால் நேரடியாகவோ செய்யலாம் என்று நீதிபதிகள் கூறினர். இது தனியார் பள்ளிகளுக்கு மட்டும்தான். அதையும் கூட ஓர் ஆலோசனையாகத்தான் நீதிபதிகள் கூறினரே தவிர, ஆணையாகப் பிறப்பிக்கவில்லை.

Entrance Exam for 11th class? As against social justice... Ramadoss

அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை நீதிமன்றம் எந்த ஆணையும் பிறப்பிக்கவில்லை. அவ்வாறு இருக்கும்போது அனைத்துப் பள்ளிகளுக்கும் நுழைவுத் தேர்வு நடத்த அரசு துடிப்பது தவறு. அதுவும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டால் மட்டுமே நேரடியாக வினாக்கள் எழுப்பப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள போதிலும், கடுமையான கரோனா அச்சம் நிலவும் நிலையில் நேரடியாக நுழைவுத் தேர்வை நடத்தி, அடுத்த வாரத்திற்குள் மாணவர் சேர்க்கையை முடித்து பாட வகுப்புகளைத் தொடங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி ஆணையர் கூறியிருப்பது மாணவர் நலனுக்கு எதிரானதாகும்.

11ஆம் வகுப்புக்கு அவசர அவசரமாக நுழைவுத் தேர்வு நடத்தி, மாணவர் சேர்க்கையை முடிப்பதற்கு அரசு துடிப்பது ஏன்? எனத் தெரியவில்லை. 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. அவை வெளியிடப்பட்ட பிறகு, அந்த மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துவதுதான் சரியானதாக இருக்கும். கடந்த ஆண்டும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், பருவத் தேர்வுகளில் மாணவர்களின் செயல்பாடுகள் அடிப்படையில் வழங்கப்பட்ட மதிப்பெண்களின்படிதான் 11ஆம் வகுப்புக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. ஆனால், இப்போது பொருந்தாத ஒரு தீர்ப்பைக் காரணம் காட்டி அந்த நடைமுறையை மாற்றக்கூடாது.

Entrance Exam for 11th class? As against social justice... Ramadoss

எந்தப் படிப்புக்கும் நுழைவுத் தேர்வு கூடாது என்பதுதான் தங்களின் நிலைப்பாடு என்று முதல்வர் ஸ்டாலின் மீண்டும் மீண்டும் கூறுகிறார். நீட் உள்ளிட்ட எந்த நுழைவுத் தேர்வும் நடத்தக் கூடாது என்று கடந்த ஜூன் 5ஆம் நாள் நான் வலியுறுத்திய நிலையில், அதே கோரிக்கையை வலியுறுத்தி பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதுகிறார். ஒருபுறம் இவையெல்லாம் நடக்கும் நிலையில் மற்றொருபுறம் மாநில அரசுப் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவிக்கிறது. ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு? இதுதான் சமூக நீதியைப் பாதுகாக்கும் வழியா?

கல்லூரிப் படிப்புக்கே நுழைவுத் தேர்வு கூடாது என்ற நிலையில், பள்ளிப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்தி, தவறான முன்னுதாரணத்தைத் தமிழக அரசு ஏற்படுத்திவிடக் கூடாது. தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் மட்டுமின்றி, தனியார் பள்ளிகளிலும் 11ஆம் வகுப்புக்குக் கடந்த ஆண்டு எவ்வாறு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டதோ, அதேபோல் நடப்பாண்டும் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios