தடுப்பூசி ஆராய்ச்சி அதன் உருவாக்கம் மற்றும் விநியோகம் தொடர்பாக, நிபுணர்குழு உடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் இன்னும் கூட கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை எந்த நாட்டிலும் இல்லாத அளவிற்கு அமெரிக்காவே இந்த வைரசால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்த நிலையில் இந்தியா உள்ளது. இந்தியாவில் இதுவரை 90 லட்சத்திற்கும் அதிகமானோர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.  இதுவரை நாட்டில் 1.32 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் ஓரளவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு குறைய தொடங்கியிருந்தாலும் அதன் இரண்டாவது  அலை பாதிப்பு உச்சநிலையை எட்டி விடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதே நேரத்தில் இந்த வைரஸில் இருந்து விடுபட வேண்டும் என நாட்டின் ஒட்டுமொத்த விஞ்ஞானிகளும் தடுப்பூசி ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர். 

தடுப்பூசி எப்போது மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பில் நாடு இருந்து வருகிறது. அதே நேரத்தில் உலகம் முழுவதும் நடந்துவரும் கொரோனா பரிசோதனையில் பைசர், மாடர்னா, பாரத் பயோடெக் போன்ற பல நிறுவனங்கள் ஆராய்ச்சியில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. அதிலும் குறிப்பாக மாடர்னா, பைசர் உள்ளிட்ட நிறுவனங்கள் கொரோனா தடுப்பூசி சோதனையை வெற்றிகரமாக முடிந்துள்ள நிலையில் ஒப்புதல் பெறுவதற்காக திட்டமிட்டுள்ளன.  இந்நிலையில் நேற்று டெல்லியில் பிரதமர் மோடி மருத்துவ நிபுணர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் காணொளி வாயிலாக ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தினார். 

இதில் நாட்டின் கொரோனா நிலவரம், தடுப்பூசி விநியோகத்திற்கான தயார்நிலை, விநியோக முறை, நிர்வாகம் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து அவர் ஆய்வு  மேற்கொண்டதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அப்போது அவர் தடுப்பூசி உருவாக்கம் மற்றும் விநியோகம் தொடர்பாக ஆராய்ச்சி நிபுணர்களுக்கு பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்தார். தடுப்பூசி அனைத்து தரப்பு மக்களுக்கும் விரைவாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் மோடி வலியுறுத்தினார். பண்டிகை நேரத்தில் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் எனவும், கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தியதுடன், சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல், கை கழுவுதல், தூய்மையை பராமரித்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கைகள் தொடர வேண்டும் எனவும் கூறினார். 

அப்போது விஞ்ஞானிகள், கல்வியாளர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள், மருந்து நிறுவனங்கள் மேற்கொண்ட முயற்சிகளை வெகுவாக பாராட்டினார். மேலும் பங்களாதேஷ், மியான்மர், பூட்டான், சுவிட்சர்லாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள் இந்திய தடுப்பூசிகளின் மேம்பாடு மற்றும் பயன்பாடுகளில் இணைந்து செயல்பட மிகுந்த ஆர்வம் காட்டுவதாக கூறினார். சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் முன்னணி தொழிலாளர்களுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை வழங்கவும், தடுப்பூசி வினியோகத்தை பெருக்குவது மற்றும் சிரஞ்சி மற்றும் ஊசிகள் போன்றவற்றை கொள்முதல் செய்வது மேம்பட்ட கட்டங்களில் உள்ளதாக கூறினார். மேலும் தடுப்பூசி விநியோகத்தில் பயிற்சி மற்றும் செயல்படுத்துதலில் மருத்துவ மற்றும் நர்சிங் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுவார்கள் எனவும், தடுப்பூசி நாட்டின் ஒவ்வொரு நபரையும் சென்றடைய உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மோடி அப்போது வலியுறுத்தினார். மேலும் தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு உதவுவதற்காக கோவிட் சுரக்ஷா மிஷன் திட்டத்தின் கீழ் 900 கோடி உதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.