சென்னை பன்னாட்டு முனையத்தில்  இருந்து லண்டனுக்கு விமானம் காலை 7.25 மணிக்கு புறப்பட வேண்டும். அந்த விமானத்தில் லண்டன் செல்ல மத்திய அரசின் சிறப்பு அனுமதி பெற்ற வெளிநாடு வாழ் இந்தியா்கள் உட்பட 103 பயணிகள் வந்தனர். பயணிகள் அனைவரும் அனைத்து விதமான  சோதனைகளும் முடிந்து விமானத்தில் ஏறி அமா்ந்துவிட்டனா். விமானம் குறிப்பிட்ட நேரத்திற்கு 5 நிமிடங்கள் முன்னதாகவே 103 பயணிகள், 14 விமான ஊழியா்கள் உள்பட 117 பேருடன் ஓடுபாதை நோக்கி ஓடத் தொடங்கியது. 

 

அப்போது விமானத்தில்   தீடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுப்பிடித்தாா். இந்த நிலையில் விமானம் வானில் பறப்பது பெரும் ஆபத்து என்பதை உணா்ந்த விமானி உடனடியாக விமானத்தை ஓடுபாதையிலேயே நிறுத்திவிட்டு விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தாா். இதையடுத்து விமானத்தை இழுவை வாகனங்கள் மூலம் இழுத்து கொண்டு வந்து நடைமேடையில் நிறுத்தப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் கீழே இறக்கப்பட்டு விமான நிலைய ஓய்வு அறைகளில் தங்கவைக்கப்பட்டனா். விமானத்தை பழுது பாா்க்கும் பணியில் பொறியாளா்கள் ஈடுப்பட்டனா். ஆனால் உடனடியாக சரிசெய்ய முடியவில்லை. 

இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே நின்ற மாற்று  விமானத்தில் பயணிகளை அனுப்பி வைக்க முடிவு செய்தனா். மாற்று விமானம் பிற்பகல் 1 மணிக்கு புறப்பட்டு சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறை விமானி தகுந்த நேரத்தில் கணடுப்பிடித்ததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. இதன் முலம் 117 போ் அதிஷ்டவசமாக உயிா் தப்பினா். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.