பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா லண்டனில் 17 கோடி ரூபாய் மதிப்பில் சொத்து வாங்கிய விவகாரத்தில் பண மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு மத்திய அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
 
இந்த வழக்கில் ராபர்ட் வதேராவுக்கு விசாரணை நீதிமன்றம் முன்ஜாமீன் கொடுத்திருக்கும் நிலையில் அதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வழக்கு தொடுத்துள்ளது.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடக்கும் இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “ ராபர்ட் வதேரா இந்த வழக்கின் புலனாய்வு விசாரணைக்கு ஒத்துழைப்பு தரவில்லை. 

எனவே அவரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அவசியமாகிறது பண மோசடியில் அவர் நேரடியாக தொடர்பு கொண்டிருப்பதால் அவரை கஸ்டடி எடுத்து விசாரிக்க வேண்டியது தேவையாகிறது” என்று நீதிபதி சந்திரசேகரிடம் தெரிவித்தார்.

அப்போது வதேரா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “விசாரணைக்காக அமலாக்கத்துறை எப்போதெல்லாம் அழைத்ததோ, அப்போதெல்லாம் வதேரா தவறாமல் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைத்திருக்கிறார். அமலாக்கத்துறை சொல்லும் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொள்ள மறுப்பது என்பது விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பது ஆகாது” என்று தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் இந்த வழக்கை நவம்பர் 5 ஆம் தேதியன்று ஒத்திவைத்தது. இதையடுத்து சிதம்பரத்தை போல ராபர்ட் வதேராவும் கைது செய்யப்படுவாரா என்ற ஒரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.