விஜயகாந்த் சிங்கிள் சிங்கமாய் தமிழக அரசியலை தெறிக்கவிட்ட காலங்களெல்லாம் போயே போச்! இப்போது அவரை வைத்து என்னதான் சீரியஸ் சீனை நிகழ்த்த தே.மு.தி.க. முயன்றாலும் அதை வைத்து  மூச்சு முட்ட காமெடி பண்ணுவதே தி.மு.க. வட்டார கட்சிகளுக்கும், அரசியல் விமர்சகர்களுக்கும் வேலையாகிவிட்டது கொடுமை. 

விஷயம் இதுதான்...கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் போலவே மதில்மேல் காரியக்கார பூனையாக ‘இங்கே தாவவா? இல்ல அங்கே தாவவா?’ என்று நோட்டம் பார்த்து, நாட்களை இழுத்து, அவப்பெயர் வாங்கிக் கட்டிய தே.மு.தி.க., இப்பவும் மாறவில்லை. இதோ இந்த நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கும் தன்னால் முடிந்தளவு இழுப்பு சீன்களை போட்டுக் கொண்டுள்ளது. இதனால் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது அந்த கட்சி. குறிப்பாக ‘பேரம் படியவில்லை போலும்’ என்று வெளிப்படையாகவே பேசுகின்றனர் சகல கட்சியினரும். இந்த சீரியஸ் விமர்சனம் போதாதென்று, சமீபத்தில் பெரும் நக்கலுக்கும் ஆளாகியிருக்கிறது தே.மு.தி.க. 

அதன் விபரம் இதுதான்... நேற்றும் தே.மு.தி.க.வின் தலைமை கழகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் ‘தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் அவசர ஆலோசனை கூட்டம் 05.03.2019 செவ்வாய்கிழமை காலை 10:30 மணியளவில் நடைபெறும்.’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதை கையிலெடுத்து பேசும் அரசியல் விமர்சகர்கள் “இந்த உலகத்துலேயே  அவசர ஆலோசனைக்கு மூணு நாள் டைம் எடுத்துக்கிட்ட ஒரே கட்சி தே.மு.தி.க.தான். நாம என்ன 1980களிலேயா இருக்கோம்? தமிழ்நாட்டில் தூர மாவட்டங்களில் இருந்து ரயில்ல ரிசர்வ் பண்ணி மெதுவா வந்து சேர? மொபைல்ல ஒரு மெசேஜை தட்டுனா, தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தும் தன்னோட சொகுசு காரை எடுத்துட்டு அதிகபட்சம் பத்து மணி நேரத்துல வந்து சேர்ந்துட போறாங்க. இல்லேன்னா சட்டுன்னு ஃபிளைட்ட பிடிச்சு சரசரன்னு வந்து இறங்கிடப்போறாங்க. 

அதுவுமில்லாம கடந்த ஒரு வாரமாகவே தே.மு.தி.க.வின் அனைத்து மாவட்ட நிர்வாகிகளில் 90% பேர் சென்னையிலதான் குடியிருக்காங்க, கூட்டணிக்காக. இதுதான் யதார்த்தம். நிலைமை இப்படியிருக்க, மூணு நாள் டைம் கொடுத்து ‘அவசர ஆலோசனை கூட்டத்தை’ அறிவிக்கிறாங்கன்னா, கூட்டணி உள்ளிட்ட எல்லா விஷயத்திலேயும் தெளிவா முடிவெடுத்து முடிச்சுட்டு, மேலும் செய்ய வேண்டிய பல ஃபார்மாலிட்டிகளையும் பண்ணிட்டு, ச்சும்மா கணக்கு காட்டுறதுக்காக நிர்வாகிகளை அழைச்சு ஆலோசனை நடத்துறாங்க. நாளைக்கு தேர்தல் முடிவுகள் நெகடீவாக இருந்தால் ‘கட்சியினரிடம் கேட்டு, அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப கூட்டணி வெச்சோம்’ன்னு சொல்லி தப்பிக்கத்தான் இந்த ஏற்பாடு.

 

இதெல்லாம் அவங்க கட்சி நிர்வாகிகளுக்கும் தெரியும், ஆனாலும் வாய் திறக்க முடியாத சூழல். காரணம், கட்சி இப்போ என்ன விஜயகாந்தோட கையிலா இருக்குது, எதையும் நேரடி அணுகுமுறையில அதிரடியா பண்றதுக்கு?” என்கின்றனர். தாங்கள் எதிர்பார்த்திருந்த, தங்கள் தளபதி நேரிலேயே போய் அழைப்பு விடுத்த தே.மு.தி.க. அப்படியே அ.தி.மு.க. கூட்டணிக்குள் ஐக்கியமாவதை புரிந்துவிட்ட தி.மு.க.வினரும் இப்போது அக்கட்சியை வைத்து வறுக்க துவங்கிவிட்டனர். 

அவர்களும் இந்த அவசர ஆலோசனை கூட்ட அறிவிப்பை கையிலெடுத்து...”எல்லாத்தையும் பிரேமலதா, அவங்க பசங்க, சுதீஷ் நாலுபேரும் பேசி முடிவெடுத்துட்டாங்க. எல்லாவகையிலும் திருப்தி கிடைச்ச பிறகே அ.தி.மு.க. கூட்டணிக்குள்ளே நுழையுறாங்க. வெறும் கண் துடைப்புக்காக கட்சி நிர்வாகிகளை ஆலோசனைக்கு அழைச்சிருக்கிறாங்க அந்தம்மா. இதுல பெரிய வேதனை நிறைந்த வேடிக்கை என்னான்னா, ’கேப்டன் தலைமையில் அவசர ஆலோசனை’ன்னு சொல்லியுள்ளதுதான். அரசியல் ஆலோசனை அதுவும் அவசர ஆலோசனை நடத்துற நிலையிலா அவரு இருக்கார்? அவரை சந்திச்சுட்டு வந்த பிறகு ரஜினியின் மன்ற முக்கிய நிர்வாகிகள் தரப்பிலிருந்து வந்த, விஜயகாந்தின் உடல்நிலை பற்றிய தகவல்கள் எவ்வளவு மோசமா இருந்துச்சு அப்படிங்கிறது தமிழகமே அறியும். 

‘விஜயகாந்தால் ரஜினியை அடையாளம் காண்பதும்ம், அவரது பெயரை சொல்வதும் பெரும் திணறலா இருந்துச்சு.’ன்னு ஓப்பனா பேசினாங்க. எங்க தளபதியும் சந்திச்சுட்டு வந்தார். விஜயகாந்த் உடல்நிலை பற்றி அவரு நெகடீவாக கமெண்ட் ஒன்றும் அடிக்கலையே தவிர, அவரோட முகம் எந்தளவுக்கு விஜயகாந்தின் உடல் நிலையை பார்த்து சுருங்கியிருந்துச்சுன்னு எங்களால் புரிஞ்சுக்க முடியும். நினைவாற்றல் மற்றும் எதையும் பற்றி விவாதித்தல், அலசி ஆராய்தல், ஆலோசனை செய்தல்...ன்னு எல்லா விஷயத்திலும் பாவம் திறனற்றவரான நிலையிலிருக்கிறார் விஜயகாந்த். அவர் தலைமையில் அரசியல் ஆலோசனை கூட்டம்!ன்னு இவங்க சொல்றது அவங்க கட்சியில எஞ்சியிருக்கிற தொண்டனை வேணா சந்தோஷப்படுத்துமே தவிர, பொதுமக்களை ஈர்க்க முடியாது.” என்கிறார்கள். 

இந்நிலையில், சில வருடங்களுக்கு முன்பாக விஜயகாந்தை வைத்து அதிகமாய் மீம்ஸ் போடுவதை எதிர்த்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சொல்லி போலீஸில் புகார் கொடுத்தது தே.மு.தி.க. டீம். அதேபோல் இப்போது, அவரது உடல் நிலை குறித்த தகவல் எனும் பெயரில் பலர் வதந்தி கிளப்புவதாக சொல்லி மீண்டும் காவல்துறையை நாட இருக்கிறாராம் விஜயபிரபாகரன். ஹும்!கூட்டணி கட்சிதானே ஆளுது, புகார் கொடுங்க பாஸ், சட்டுன்னு புடிச்சு கொடுத்திடுவாங்க.