விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு தனிமனித தாக்குதலில் ஈடுபட்டு வரும் பாசிச காவி கும்பலை வன்மையாக கண்டிக்கின்றோம் என தியாகி இமானுவேல் சேகரன் பேரவை அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்: கடந்த 27-9-2009 அன்று ஐரோப்பாவில் பெரியார்- அம்பேத்கர் வாசகர் வட்டம் நடத்திய இணையவழி கருத்தரங்கில் உரையாற்றிய திருமாவளவன் மனுஸ்மிருதியில் பெண்களை இழிவுபடுத்தி எழுதப்பட்ட வாசகங்களை சுட்டிக்காட்டினார். புரட்சியாளர் அம்பேத்கர். தந்தை பெரியார் போன்ற சமூக மாற்றுச் சிந்தனையாளர்கள் எழுப்பிய மனுஸ்மிருதி எதிர்ப்புக்  குரலின்  தொடர்ச்சிதான் என்றாலும், தோழர் தொல்.திருமாவளவன் குறிப்பிட்டு பேசியதை அவரின் சொந்தக் கருத்து போன்று சித்தரித்து தங்கள் ஆதரவு ஊடகங்களின் துணையோடு இந்துத்துவவாதிகள் மக்களிடையே விஷமத்தனத்தை விதைக்க முற்படுகிறார்கள். 

தேர்தல் அரசியலில் பங்கேற்கும் காட்சிகளில் விடுதலை சிறுத்தைகள் மட்டுமே சனாதன  எதிர்ப்பை அரசியல் முழக்கமாக உறுதியான நிலைப்பாட்டுடன் களமாடுகிறது. அதுவே பாஜகவிற்கு தமிழ் மண்ணில் காலூன்ற பெருந்தடையாக இருந்து வருகிறது. இது தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் அதனை வழிநடத்தும் தோழர்.திருமாவளவன் மீதான பார்ப்பனிய இந்துத்துவவாதிகளின் கோபத்திற்கு காரணம். சனாதன எதிர்ப்பில் நீண்ட நெடிய பாரம்பரியத்தைக் கொண்ட தமிழ் மண்ணில் கண்மூடித்தனமாக காட்டு கூச்சல்கள் பாசிச பாஜகவை வேரூன்ற வைக்க உதவும் என சங்பரிவாரங்கள் நம்புகின்றன. இந்துத்துவ பாசிச பயங்கரவாதிகளின் வன்முறைக்கு துணைபோகும்விதமாக தோழர் தொல்.திருமாவளவன் மீதும் பொய்வழக்கு பதியப்பட்டுள்ளமையை வன்மையாக கண்டிக்கின்றோம். நம் சகோதரிகளை இழிவுபடுத்தும் மனுஸ்மிருதி தடை செய்யப் வேண்டிய நூல் என்பதை அரசு ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

பெண்களை இழிவுபடுத்தி சமத்துவத்தை வேரறுப்பது மனுதர்ம சாஸ்திரமே தவிர மண்ணுரிமைக்கும், பெண்ணுரிமைக்காக போராடும் தோழர் திருமாவளவன் அல்ல. மனுதர்ம சாஸ்திரத்தில் பெண்களை இழிவுபடுத்தும் விதமாக சொல்லாடல்கள் இல்லை  என்பதை வலியுறுத்திக் கூறி விவாதத்திற்கு வர திராணி இல்லாத இந்துத்துவாவாதிகள் அதனை தட்டையாக எதிர்த்து வருவது திட்டமிட்ட கயமைத்தனம் உடையது. இன்றைய ஊடக வெளிச்சத்தால் மனுதர்ம உரைக்கும் உள்ளார்ந்த பொருளை உணர்ந்த மக்கள் அவற்றை கொளுத்துவதற்கு அணிகமாகி விட்டார்கள். பெண்களை இழிவுபடுத்தி சாதியத்தை பாதுகாப்பும் மனுதர்மத்தை கொளுத்துவோம். விடுதலை சிறுத்தைகளின் சனாதன எதிர்ப்புப் போரில் இணைந்து கரம் கொடுப்போம் என  அதில் கூறப்பட்டுள்ளது.  

குறிப்பாக தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திற்கான அரசியல் இயக்கமாக உள்ள புதிய தமிழகம் மற்றும் அக்கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் திருமாவளவனை கடுமையாக விமர்சித்து பாஜகவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் நிலையில் தேவேந்திர குல மக்களின் மற்றொரு அரசியல் இயக்கமான இமானுவேல் சேகரன் பேரவை திருமாவளவனுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியிருப்பது  கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் மற்றும் பாஜகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.