வரும் ஜுன் மாதம் மூன்றாம் தேதி 16 ஆவது நாடாளுமன்றம் முடிவுக்கு வருவதையோட்டி 17 ஆவது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் நேற்று மாலை வெளியிட்டது. கிட்டத்தட்ட  கடந்த 5 ஆம் தேதியே அறிவிக்க வேண்டிய தோத்ல் தேதி அறிவிப்பை தேர்தல் ஆணையம் லேட்டாக வெளியிட்டது.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதிகளை, இந்திய தேர்ததல் ஆணையர்  நேற்று மாலை, 5:00 மணிக்கு வெளியிட்டார். இது ராகு காலம் என கூறப்படுகிறது. மாலை, 4:30 - 6:00 வரை ராகு காலமாக இருப்பதால், அதற்கு முன், தேர்தல் தேதியை வெளியிட்டு இருக்கலாம்' என பல அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ், ராகு காலத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டதற்கு, அதிக கவலை இடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர், கடந்தாண்டு டிசம்பரில் நடந்த சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பின், நல்ல நேரத்தில் பதவி ஏற்க வேண்டும் என்பதற்காக, டிச., 13 வரை காத்திருந்தார்.

அதற்கு முன்னதாக, தெலுங்கானா சட்டசபையை கலைப்பதற்கும், 'நல்ல நேரம் வரட்டும்' என அவர் காத்திருந்தது குறிப்பிடத்தக்கதது. இதே போல் கர்நாடக மாநில, பா.ஜ., தலைவர் எடியூரப்பா, முன்னாள் பிரதமரும், மதச் சார்பற்ற ஜனதா தளம் தலைவருமான, தேவகவுடா , உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும், ஜோதிடத்தில் ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவர்கள்.

ஆந்திர முதலமைச்சர் , சந்திரபாபு நாயுடுவும், நல்ல நேரம் பார்த்தே எதையும் செய்து பழக்கப்பட்டவர். இந்த தலைவர்கள் அனைவரும், தேர்தல் தேதி, ராகு காலத்தில் வெளியானதற்கு கவலை தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.