மின்கட்டண உயர்வை கண்டித்து வரும் 21ஆம் தேதி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

கொரோனா பொதுமுடக்க காலத்தில் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மின் கட்டணம் செலுத்த அரசு சார்பில் கால அவகாசம் வழங்கப்பட்டது. இதன்பின்னர் சமீபத்தில் 4 மாதத்துக்கான மின் கட்டணம் செலுத்த வலியுறுத்தப்பட்டது. இதில் வழக்கத்தை விட அதிகமாக கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்தது. ஆனால், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் ஆகியோர் பங்கேற்றனர். 

இதில், மின் கட்டண உயர்வு குறித்து இக்கூட்டத்தில்  ஆலோசிக்கப்பட்ட நிலையில், வருகிற 21ம் தேதி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி திமுக தொண்டர்கள் தங்கள் வீட்டின் முன்பு கறுப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.