தமிழகத்தில் சாதியும் அரசியலும் ஒன்றுடன் ஒன்று பிண்ணி பிணைந்தது. இவை இரண்டையும் பிரிக்க முடியாத சூழலே இதுவரை நீடித்துவருகிறது. தேர்தல் முடிவுகளை தீர்மானப்பதில் சாதி வாரியான வாக்கு வங்கிகள் முக்கிய பங்காற்றுகின்றன. 

தமிழகம் முழுவதும் AZ ரிசர்ச் பார்ட்னர்ஸ் அமைப்பு தற்போதைய அரசியல் சூழல் மற்றும் மக்கள் ஆதரவு குறித்த கள ஆய்வை மேற்கொண்டுள்ளது. தமிழகம் முழுவதும் 11,691 பேரிடம் கருத்து கேட்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் பகுதிகள் வாரியாக மக்களின் பிரச்னைகள் மற்றும் அவர்களின் ஆதரவு குறித்து விரிவாக பார்ப்போம்.

முதலாவதாக இந்த பதிவில்,தற்போதைய தமிழக முதல்வர் மற்றும் மூத்த அமைச்சர்கள் சார்ந்த கொங்கு மண்டலம்(மேற்கு) குறித்து அலசுவோம்.

கொங்கு மண்டலம்:

கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது கொங்கு மண்டலம்(மேற்கு மண்டலம்).

மேற்கு மாவட்ட மக்களின் பிரதான பிரச்னைகள்: மின்சார விநியோகம் முறையாக இல்லை என 14% மக்கள் குறை கூறியுள்ளனர். உயர்கல்வி வசதிகள் போதவில்லை என 12% பேரும் சீராக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை என 11% பேரும் தெரிவித்துள்ளனர். 

ஆதிக்க சமூகம்:

மேற்கு பிராந்தியத்தை பொறுத்தமட்டில் கவுண்டர், வெள்ளாளர், வன்னியர் ஆகிய சமூகத்தினர் பெருவாரியாக உள்ளனர். 

கொங்கு மண்டலம் பொதுவாக அதிமுகவின் கோட்டையாகவே திகழ்ந்துவருகிறது. அந்த மண்டலத்தில் அதிமுக செலுத்தி வருகிறது. கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக 136 தொகுதிகளிலும் திமுக கூட்டணி 98 இடங்களிலும் வெற்றி பெற்றது. 2011ம் ஆண்டிற்கு பிறகு 2016ல் தொடர்ச்சியாக இரண்டாவது முறை அதிமுக ஆட்சியமைக்க பேருதவியாக இருந்தது கொங்கு மண்டலம் தான். 

கோயம்பத்தூர் மாவட்டத்தின் 10 தொகுதிகளில் சிங்காநல்லூரைத் தவிர மற்ற 9 தொகுதிகளிலும் அதிமுகவே கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றது. அதேபோல சேலம் மாவட்டத்தின் 11 தொகுதிகளில் பத்திலும், திருப்பூர் மாவட்டத்தின் தாராபுரம் தொகுதியை தவிர மற்ற ஒன்பதிலும் அதிமுகவே வெற்றி பெற்றது. இவ்வாறு கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சியை தீர்மானித்ததே கொங்கு மண்டலம்தான். 

இதுவரை கொங்கு மண்டலத்தில் ஆதிக்கம் செலுத்திவந்த அதிமுகவிற்கு, தற்போது அந்த பகுதிகளில் ஆதரவு கணிசமாக குறைந்துள்ளது. 

வாக்கு பகிர்வு:

சாதி வாரியாக பார்க்கையில், கவுண்டர் மற்றும் வெள்ளாளர் சமூகத்தை பொறுத்தமட்டில் அதிமுகவிற்கு 75% ஆதரவும் திமுகவிற்கு 45% ஆதரவும் உள்ளது. ரஜினிகாந்திற்கு 26% மற்றும் கமல்ஹாசனுக்கு 11% ஆதரவு உள்ளது. 

வன்னியர் சமூகத்தை பொறுத்தவரையில் அதிகபட்சமாக திமுகவிற்கு 28% ஆதரவும் அதிமுகவிற்கு 23% ஆதரவும் உள்ளது. அன்புமணி ராமதாஸ் இதே சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் பாமகவிற்கு 20% வன்னியர் சமூகத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ரஜினிகாந்திற்கு 7% மற்றும் கமல்ஹாசனுக்கு 4% ஆதரவு உள்ளது. 

கடந்த மக்களவை தேர்தலில் மேற்கு பிராந்தியத்தில் 45% ஓட்டு வங்கியை அதிமுக பெற்றிருந்தது. ஆனால் தற்போதைய சூழலில் 30% மக்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர். கொங்கு மண்டலம்(மேற்கு பிராந்தியம்) அதிமுகவின் கோட்டையாக திகழ்ந்த நிலையில், தற்போது அதிமுகவின் செல்வாக்கு அந்த பகுதியில் கணிசமாக குறைந்துள்ளது. 

கொங்கு மண்டலத்தில் இழப்பதற்கு எதுவும் இல்லாத திமுகவிற்கு 24% மக்கள் ஆதரவு உள்ளது. கடந்த 2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் 25% வாக்கு வங்கியை திமுக பெற்றிருந்தது. எனவே கடந்த முறைக்கும் இந்த முறைக்கும் திமுகவின் வாக்கு வங்கியில் பெரியளவில் வித்தியாசம் இருக்காது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.  

ரஜினிகாந்திற்கு 12% பேர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அவற்றில் நான்கில் ஒரு பங்கான 3% ஆதரவு மட்டும்தான் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கிடைத்துள்ளது.