எங்க முகத்தில் கரி பூசிட்டீங்களே….நஷ்ட ஈடு கேட்கும் ஆர்.கே.நகர் தொகுதி சுயேட்சை வேட்பாளர்கள்…

பணப்பட்டுவாடா குற்றச்சாட்டு தொடர்பாக சென்னை ஆர்.கே.தொகுதியில் நடைபெறுவதாக இருந்த இடைத் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதை

அடுத்து,அங்கு போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர்கள், தங்களுக்கு நஷ்ட ஈடு கேட்டு முகத்தில் கரியை பூசிக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் சார்பில் சுயேச்சை வேட்பாளராக ஆறுமுகம் போட்டியிட்டார்.

அவரும், சங்கத்தின் தலைவர் செல்லப்பாண்டியனும் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்கு சேகரித்தனர். இவருடைய பிரசாரம் நகைச்சுவையாக இருந்ததால் அனைவரும் ரசித்தனர்.இதே போன்று 50 க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் தங்களுக்கு ஓட்டு கிடைக்கிறதோ இல்லையோ, தொகுதி முழுவதும் சுற்றி சுற்றி வந்து பிரச்சாரம் செய்து வந்தனர்

இந்தநிலையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது அவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதனிடையே  ஆறுமுகம் உள்பட சில சுயேச்சை வேட்பாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தண்டையார்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் இயங்கும் தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகம் முன்பு முகத்தில் கரியை பூசியபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறிய கட்சி வேட்பாளர்கள், எந்தத் தவறும் செய்யாமல், வியர்வை சிந்தி, உழைத்த பணத்தைச் செலவு செய்தோம். எங்கள் உழைப்பு அனைத்தும், தேர்தல் ரத்து உத்தரவால் வீணாகி போய்விட்டதாக குற்றம்சாட்டிய அவர்கள், தேர்தல் டெபாசிட் தொகையை திரும்ப தர வேண்டும் என்றும், டி.டி.வி.தினகரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் கோ‌ஷங்கள் எழுப்பினர்.