உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 3-வது கட்டமாக 69 தொகுதிகளில் தேர்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
இன்று தேர்தல்
நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 403 சட்டசபை தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு நடந்து வருகிறது. இதுவரை 2 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன.
3-வது கட்டமாக இன்று (ஞாயிறு) 69 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கின் லக்னோ நாடாளுமன்ற தொகுதி, சமாஜ்வாதி கட்சியின் கோட்டையாக விளங்கும் கன்னோஜ், மணிப்புரி மற்றும் எட்டாவா தொகுதிகளுக்கும் இன்று ஓட்டுப் பதிவு நடைபெறுகிறது.
12 மாவட்டங்கள்
இன்று தேர்தல் நடைபெறும் 69 தொகுதிகளும் பரூக்காபாத், ஹர்டாய், கான்பூர் திகாத், கான்பூர், உன்னாவோ, பரபங்கி, சீத்தாப்பூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இடம் பெற்றுள்ளன.
கடந்த 2012-ம் ஆண்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், இந்த 69 தொகுதிகளில் 55 தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ், பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் முறையே 6, 5 மற்றும் 2 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தன.
