இலங்கையில் இறுதிக்கட்ட போர் உச்சத்தில் இருந்த போதும், அது நிகழ்ந்து முடிந்த பின்னும் சில காலமும் பக்‌ஷேவை தாறுமாறாக தாக்கிப் பேசிய தமிழக அரசியல்வாதிகளில் முக்கியமானவர் திருமாவளவன். அதே திருமா, முள்வேலி முகாம்களை பார்வையிட சென்ற தமிழக எம்.பி.க்களில் ஒருவராக இருந்து, பக்‌ஷேவை சந்தித்து அவரின் அன்பு வரவேற்புக்கெல்லாம் பாத்திரமானபோது மிக கடுமையாக விமர்சிக்கப்பட்டார். 

தமிழகம் திரும்பியவர் மீண்டும் இலங்கை விவகாரத்துக்கு எதிராக தொடர்ந்து பேசி, தன்னுடைய பழைய இமேஜை தக்க வைத்தார். ஆனால் மத்திய தேர்தல் நெருங்கும் இந்த வேளையில் அவர் கொட்டியிருக்கும் சில கருத்துக்கள் மீண்டும் அவரை ‘ஈழத்தை வைத்து நாடகம் போடும் அரசியல்வாதி!’ என்று தாக்குதல் நடத்த காரணமாகி இருக்கிறது. 

அதாவது ஈழ இறுதிப்போர் நடந்தபோது தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த தி.மு.க.வுடனும், தேசத்தை ஆண்டு கொண்டிருந்த காங்கிரஸ் உடனும் வைகோவும், திருமாவும் மீண்டும் கூட்டணி வைத்திருப்பதை அரசியல் விமர்சகர்கள் மிக வன்மையாக விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில், ’காங்கிரஸின் கூட்டணில் இருக்கிறீர்களே, உங்களுக்குள் முரண்பாடுகள் இருக்கிறதே!?’ என்று சமீபத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு...“ஆமாம், காங்கிரஸுக்கும் எங்களுக்கும் ஈழத்தமிழர் பிரச்னையில் முரண்பாடு உண்டு. ஆனால் இவை இரண்டாம், மூன்றாம் இடத்தில் உள்ள முரண்பாடுகள்தான்.

 

இந்தப் பிரச்னைகளும், முரண்பாடுகளும் விரைவில் பின்னுக்கு தள்ளப்பட்டு விடும்.” என்று பதில் கூறியிருக்கிறார். இதைத்தான் வலுவாக பிடித்துக் கொண்டு பேசும் அரசியல் விமர்சகர்கள்...”கடந்த சட்டமன்ற தேர்தலில் வைகோவோடு சேர்ந்து கொண்டு மக்கள் நல கூட்டணி அமைத்த திருமா, தி.மு.க.வையும் காங்கிரஸையும் தாக்குவதற்கான பெரும் ஆயுதமாக பயன்படுத்தி பிரச்சாரம் செய்தது ஈழப்போரின் போது அவர்கள் இரு அரசுகளும் கண் மூடிக்கொண்டதைத்தான். 

ஆனால் இன்று அரசியல் ஆதாயத்துக்காக மீண்டும் அவர்களிடமே போய் ஒட்டிக் கொண்டிருக்கும் திருமா, எங்களது இந்த ஈழ முரண்பாடெல்லாம் முக்கியத்துவமற்ற பிரச்னைதான் என்பது போல் நியாயப்படுத்தி பேசியிருப்பது அறமல்ல. ஸ்டாலினிடம் சீட்களை பெற வேண்டும் எனும் நோக்கிலும், தேர்தல் வெற்றியை மனதில் வைத்தும், காங்கிரஸ் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் தன் கட்சியை வளர்க்க பல வாய்ப்புகளை பெறலாம் எனும் நோக்கிலும் இப்படி காலத்துக்கு ஏற்ப திருமா பேசியிருப்பதை ஜீரணிக்க முடியவில்லை. 

இதனால் தான் ஈழ தமிழர்கள் ‘தயவு செய்து தமிழக தலைவர்கள் எங்களைப் பற்றி பேசி, பிரச்னையை பெரிதாக்க வேண்டாம்!’ என்று அடிக்கடி கெஞ்சுகிறார்கள். இவர்களின் சீசன் அரசியலும், சீசன் கொள்கைகளும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.” என்கிறார்கள். ஆனால் தன் கருத்து திரித்து பரப்பப்படுவதாக இதை மறுத்துப் பேசுகிறார்  விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்.