election commission wil took action aginst vetrivel..Minister Jayakumar
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை சீர்குலைக்கவே ஜெ. சிகிச்சை பெறும் வீடியோவை டி.டி.வி.தினகரன் தரப்பினர் வெளியிட்டுள்ளதாகவும், இந்த ஆதாரத்தை விசாரணை ஆணையத்திடம் ஏன் கொடுக்கவில்லை என்றும், அமைச்சர் ஜெயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி சென்னை, அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு, லண்டன் டாக்டர், டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள், அப்போலோ டாக்டர்கள் என சிகிச்சை அளித்து வந்தனர்.
75 நாட்கள் சிகிச்சை பெற்று ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி உயிரிழந்தார். ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.
.jpg)
இதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின் மரணம் குறித்து, தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில், சென்னை, அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவின் வீடியோவை டிடிவி தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் வெளியிட்டுள்ளார். அதில் மருத்துவமனை படுக்கையில் இருக்கும் ஜெயலலிதா, பழச்சாறு அருந்தும் காட்சி உள்ளது. இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து செய்தியாளகளிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார், ஜெயலலிதாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததது. அதை மீறி இந்த வீடியோ எடுக்கப்பட்டதா ? யார் எடுத்தார்கள்? அதை ஏன் இத்தனை நாட்களாக வெளியிடவில்லை என சரமாரியாக கேள்விகள் எழுப்பினார்.
ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் தற்போது நடைபெறவுள்ள நிலையில் இந்த வீடியோ உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த வீடியோ தேர்தல் விதிமுறைகளை மீறியது என்றும் உடனடியாக வெற்றிவேல் மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது சசிகலா குடும்பத்தால் தொடர்ந்து பிரச்சனைகள் வந்தது. தற்போது அவர் இறந்தபிறகும் சசிகலா குடும்பத்தால் அவரது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பிரச்சனை தொடர்கிறது என ஜெயகுமார் குற்றம்சாட்டினார்.
மேலும் ஜெயலலிதாவின் இமேஜை சீர்குலைக்கவே இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் ஜெயகுமார், ஜெ. சிகிச்சை பெற்றதற்கான அனைத்து வீடியோ ஆதாரங்களையும் விசாரணை ஆணையத்திடம் சசிகலா குடும்பத்தினர் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறினார்.
