election commission warning police in rk nagar by election rules following

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு கடந்த ஓராண்டாக காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. 

இந்த தேர்தலில் தங்களின் பலத்தை நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் திமுக, அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களும் சுயேட்சையாக தினகரனும் களமிறங்கியுள்ளனர். களத்தில் பாஜக, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் இருக்கும்போதிலும், பிரதான போட்டி என்பது திமுக, அதிமுக, தினகரன் என மும்முனைப் போட்டியாகவே இருக்கும் என கருதப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகருக்கு நடைபெற இருந்த தேர்தல் பணப்பட்டுவாடா புகார் காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதனால் இந்தமுறை பணப்பட்டுவாடா நடைபெறாமல் தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

வெளி மாவட்டத்திலிருந்து ஆர்.கே.நகருக்குள் வாகனங்களுக்கு கட்டுப்பாடு, மாலை 5 மணிக்குமேல் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்யக்கூடாது, அனுமதி பெற்ற எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே வேட்பாளர்களுடன் பிரசாரத்திற்கு செல்ல வேண்டும் உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.

ஆனாலும் ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாகக் கூறி தமிழக பாஜக தலைவர் தமிழிசை, பாஜக வேட்பாளர் கரு.நாகராஜனுடன் ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டார்.

ஆர்.கே.நகரில் தேர்தல் விதிமுறைகளை சரியான முறையில் பின்பற்றுவதை முறையாக கண்காணிக்குமாறு போலீசாருக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அனுமதி பெறாத வாகனங்கள் ஆர்.கே.நகர் தொகுதிக்குள் வராமல் போலீசார் கண்காணிக்க வேண்டும். மீறி அனுமதி பெறாத வாகனங்கள் ஆர்.கே.நகர் தொகுதிக்குள் வந்தால், போலீசார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

அதேபோல, அனுமதி பெற்ற நபர்கள் மட்டுமே வேட்பாளருடன் வருவதை போலீசார் உறுதி செய்ய வேண்டும். அனுமதி பெற்றவர்களை விட அதிகமானோர் வேட்பாளருடன் வருவது கண்டுபிடிக்கப்பட்டாலும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

இவ்வாறு, வேட்பாளர்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகளை விதித்துவிட்டு அதோடு நிற்காமல், அவற்றை போலீசார் கண்காணிப்பதை உறுதிசெய்யும் பொருட்டு பல்வேறு அதிரடி எச்சரிக்கைகளையும் போலீசாருக்கு விடுத்துள்ளது.