பாரதிய ஜனதா எம்.பி. சாக்‌ஷி மகராஜ் மதமோதல் ஏற்படும் படியான கருத்துக்களை மீண்டும் ஒருமுறை கூறினால் கடுமையான நடவடிக்கை அவர் மீது எடுக்கப்படும். அதற்கு அனைத்து அதிகாரிகளும் எங்களிடம் இருக்கிறது என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

சர்ச்சைப் பேச்சு

உத்தரப்பிரதேசம், உன்னவ் தொகுதியின் பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி. சாக்‌ஷி மகராஜ். கடந்தவாரம் நடந்த சாதுக்கள் மாநாட்டில் சாக்‌ஷி மகராஜ் பேசுகையில், “ நாட்டில் பிரச்சினைகள் அதிகரிக்க மக்கள் தொகைப் பெருக்கமே காரணம். அதற்கு இந்துக்கள் காரணம் அல்ல. 4 மனைவிகளையும், 40 குழந்தைகளையும் பெற்றுக் கொள்பவர்களால்தான் பிரச்சினை ஏற்படுகிறது'' என்று பேசியிருந்தார்.

விளக்கம்

உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தல் தேதி கடந்த 4 ந்தேதி அறிவிக்கப்பட்டு, நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்ட நிலையில், சாக்‌ஷி மகராஜ் இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து தேர்தல் ஆணையம் சாக்‌ஷி மகராஜுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டு இருந்தது. சாக்‌ஷி மகராஜ் அளித்த விளக்கத்தில் “ தான் பொதுக்கூட்டத்தில் பேசவில்லை. தனிப்பட்ட இடத்தில் பேசினேன். எந்த மதத்தையும் குறிப்பிட்டு பேசவில்லை'' என்று கூறி இருந்தார்.

விதிமுறைமீறல்

இந்த விளக்கம் தங்களுக்கு மனநிறைவு அளிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் நேற்று தெரிவித்து , எம்.பி. சாக்‌ஷி மகராஜை கடுமையாக எச்சரித்துள்ளது.

தேர்தல் ஆணையம் நேற்று வௌியிட்ட உத்தரவில், “ எம்.பி. சாக்‌ஷிமகராஜின் விளக்கத்தை பெற்றோம். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, தேர்தல் நேரத்தில், இருசமூகத்துக்கு இடையே பிரச்சினைகள் ஏற்படும் வகையில் பேசுவது, மதங்களுக்கு இடையே மோதல் ஏற்படும் வகையில் பேசுவது தேர்தல் நடத்தை விதிமுறையை மீறிய செயலாகும்.

எச்சரிக்கை

தேர்தல் நடத்தை விதிமுறை என்பது ஜனவரி 4-ந்தேதியே நடைமுறைக்கு வந்துவிட்டது. பொதுக்கூட்டத்தில் பேசவில்லை, தனிப்பட்ட இடத்தில் பேசினேன் என்று கூறிய எம்.பி.யின் விளக்கம் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை. அவர் தேர்தல் நடத்தவிதிகளை மீறியுள்ளார் இதை கடுமையாக கண்டிக்கிறோம்.  எதிர்காலத்தில் இதுபோல் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறினால், தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க நேரிடும்.அதற்கான அனைத்து அதிகாரிகளும் ஆணையத்திடம் இருக்கிறது'' என எச்சரித்துள்ளது.