தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 6ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளதால், வாக்காளர்களை பாதுகாப்புடன் வாக்களிக்க செய்ய வேண்டிய மிகப்பெரிய சவால் தேர்தல் ஆணையம் முன்பு உள்ளது. 

எனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பிபிஇ கிட்களை வழங்கி, கடைசி ஒரு மணி நேரம் வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க அனுமதி அளிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதேபோல் தேர்தல் நடத்தும் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது, தொற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் ஆகியன குறித்தும் சுகாதாரத்துறையுடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது. 

கொரோனா தொற்றை விட தேர்தல் சமயத்தில் முக்கிய பிரச்சனையாக வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடப்பதை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது. மாவட்ட எல்லைகள் தோறும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்தே உரிய ஆவணங்கள் இல்லாத பணம், தலைவர்களின் உருவப்படம் பொறிக்கப்பட்ட பரிசுப்பொருட்கள், மதுபாட்டில்கள் ஆகியன பறிமுதல் செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. 

இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு “பணப்பட்டுவாடா, வேட்பாளர்களின் செலவினங்களை கண்காணிக்க இரண்டு செலவின பார்வையாளர்கள் வரும் 8ம் தேதி தமிழகம் வர உள்ளதாகவும், தமிழகத்தில் இதுவரை பறக்கும் படையினர் நடத்தினர் சோதனையில் 15.20 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக” தெரிவித்தார்.

உரிய ஆவணமில்லாத பணம் மட்டும் ரூ.14.13 கோடி அளவிற்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும்,  கூகுள் பே, போன் பே வழியாக வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதை தடுக்க வங்கிகள் மூலம் கண்காணிக்கப்படும் என்றும் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.