நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நடைபெற வேண்டிய இடைத்தேர்தல்கள் கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதேபோல பீகாரில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். இதனையடுத்து ஏப்ரல், மே மாதங்களில் தமிழ் நாடு, கேரளா, மேற்கு வங்காளம், அஸ்ஸாம், புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற வேண்டும். தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இடைத்தேர்தல்கள் செப்டம்பர் 7 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.


இந்நிலையில் கொரோனா காலத்தில் தேர்தலை பாதுகாப்பாக  நடத்துவது, எப்படி தேர்தல் பிரசாரம் மேற்கொள்வது போன்ற விவரங்களை ஆலோசனைகளாக வழங்கும்படி அரசியல் கட்சிகளை தேர்தல் ஆணையம் கேட்டிருந்தது. இதேபோல மாநில தேர்தல் அதிகாரிகளிடம் தேர்தல் ஆணையம் கருத்து கேட்கப்பட்டது.  இதுதொடர்பாக பெறப்பட்ட கருத்துகளை ஆய்வு செய்வதற்காக தேர்தல் ஆணையத்தின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில் கொரோனா காலத்தில் தேர்தல் நடத்துவதற்கான 10 வழிகாட்டு நெறிமுறைகளை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி ஒரு வாக்குச்சாவடியில் 1000 பேருக்கு மேல் வாக்களிக்க அனுமதி, வாக்கு இயந்திரத்தை நன்றாக சுத்தம் செய்த பிறகே வாக்களிக்க அனுமதி, வாக்குச்சாவடிகளில் கிருமி நாசினி, சானிடைசர், சோப்பு வைக்க வேண்டும், தேர்தல் பிரசாரத்தில் அதிகபட்சமாக ஐந்து வாகனங்கள் மட்டுமே அனுமதி, வாக்கு எண்ணிக்கையின் போது ஏழு மேஜைகள் மட்டுமே அமைக்க வேண்டும்.


வாக்குப்பதிவு மையத்தில் தெர்மல் ஸ்கேனர் கருவி வைக்கவேண்டும், தேர்தல் பிரசாரத்தின்போது தனி மனித இடைவெளி கட்டாயம் கடைபிடிக்க வேண்டும், தேர்தல் பணியின்போது ஒவ்வொருவரும் மாஸ்க் அணிய வேண்டும், வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும்போது ஐந்து பேருக்கு மட்டுமே அனுமதி, 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு தபால் வாக்கு என வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 
மேலும், வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்யும்போது வேட்பாளருடன் இரண்டு பேர் மட்டுமே அனுமதி, தேர்தல் அன்று வாக்களிக்கும்போது வாக்காளருக்கு காய்ச்சல், சளி  தொந்தரவு இருந்தால் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, கடைசியாக வாக்களிக்க அனுமதி, ஓட்டுப் போடும்போது வாக்காளர்களுக்கு கையுறை அணிந்து வாக்கு இயந்திரத்தில் பொத்தானை அழுத்த அனுமதி என வழங்கப்பட்டுள்ள நெறிமுறைகள் மூலம் கொரோனா காலத்தில் இனி தேர்தல் நடைபெறும் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.