election commission recommended president that disqualify AAP MLAs
டெல்லியில் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் 20 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய குடியரசுத் தலைவருக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இது ஆம் ஆத்மி கட்சிக்கும் ஆட்சிக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. கடந்த 2015ம் ஆண்டு டெல்லியில் அமைச்சர்களுக்கு உதவியாக 20 எம்.எல்.ஏக்களை செயலர்களாக முதல்வர் கேஜ்ரிவால் நியமித்தார்.
இதற்காக டெல்லி மாநில சட்டமன்றத்தில் சிறப்பு மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. பின், குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. டெல்லி மாநில அரசுக்கான சட்டத்தின் படி, முதல்வர் அலுவலகத்துக்கு மட்டுமே ஒரு செயலரை நியமிக்க முடியும். ஆனால், முதல்வர் கேஜ்ரிவாலோ 20 செயலர்களை நியமித்தார். இதையடுத்து 20 எம்.எல்.ஏக்களும் ஆதாயம் தரும் இரட்டை பதவி வகிப்பதாக கூறி பிரசாந்த் படேல் என்ற வழக்கறிஞர் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார்.
இதை விசாரித்த தேர்தல் ஆணையம், எம்.எல்.ஏ பதவியில் இருந்து உங்களை ஏன் தகுதிநீக்கம் செய்யக்கூடாது என கேள்வி எழுப்பியதோடு, இதுதொடர்பாக விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டது. இதையடுத்து ஆம் ஆத்மி கட்சியின் 20 எம்.எல்.ஏக்களின் சார்பில் தேர்தல் ஆணையத்திடம் விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிலையில், இரட்டை பதவி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் குடியரசுத் தலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், ஆம் ஆத்மி கட்சியின் 20 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்ய பரிந்துரை செய்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் தகுதிநீக்கம் செய்வாரேயானால், அந்த தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கும் சூழல் உள்ளது. இதனால் ஆம் ஆத்மி கட்சிக்கும் டெல்லியில் அக்கட்சியின் ஆட்சிக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
