அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று மதுசூதனன் அளித்த புகாரின் பேரில் சசிகலாவிற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். பொதுக்குழுவில் சில விதிகளை மாற்றி சசிகலா பொதுச்செயலாளராக இடைக்காலத்தில் நீடிப்பார் என்றும் பின்னர் முறைப்படி பொதுச்செயலாளராக தேர்வு செய்யபடுவார் என அறிவித்தனர்.

இதனால் கட்சி இரண்டு பட்டு நின்றது. சசிகலாவின் நிலைபாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவைத்தலைவர் மதுசூதனன் ஓ.பி.எஸ் அணிக்கு தாவினார். இதையடுத்து அவைத்தலைவர் பதவியில் இருந்து மதுசூதனனை சசிகலா நீக்கினர்.

அதிமுக ‘by law ‘சட்ட விதிப்படி பொதுச்செயலாளர் கட்சித்தொண்டர்களால் வாக்களித்து தேர்வு செய்யப்பட வேண்டும். இடைக்கால பொதுச்செயலாளர் என்பது கிடையாது. ஆகவே பொதுச்செயலாளர் தேர்வு செல்லாது. ரத்து செய்யப்பட வேண்டும் என மதுசூதனன் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார்.

ஆனால் அதன்பின்னர், பொதுச்செயலாளர் பதவியை பயன்படுத்தி கட்சியில் பலரை சசிகலா நீக்கினார். பலரை நியமித்தார். தினகரன், வெங்கடேசை கட்சியில் இணைத்தார்.

தினகரனுக்கு துணைப்பொதுச்செயலாளர் பதவி அளித்தார். இந்நிலையில் மதுசூதனன் புகாரை ஏற்ற தேர்தல் ஆணையம் பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவிற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதற்கு சசிகலா தரப்பினர் அளிக்கும் விளக்கத்தை பொறுத்து தேர்தல் ஆணையம் முடிவெடுக்கும். அதிமுகவின் விதிப்படி பொதுச்செயலாளர் 5 ஆண்டுகள் கட்சியின் உறுப்பினராக இருக்க வேண்டும். கட்சி தொண்டர்கள் நேரடியாக வாக்களித்து தேர்வு செய்யப்பட வேண்டும்.

இதுபோன்ற விதிகள் காரணமாக சசிகலா தேர்வு செல்லாது என்று அறிவிக்கப்படலாம். அவ்வாறு அறிவிக்கபட்டால் அவர் நியமித்த நியமனங்கள் நீக்கங்கள் எதுவும் செல்லாது.