election commission denied to accept dinakaran demand on symbol case

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுக உடைந்ததால் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இந்நிலையில், இரட்டை இலை சின்னத்தை தங்களுக்குத்தான் ஒதுக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி அணியும் தினகரன் அணியும் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு வருகின்றனர்.

இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவது தொடர்பான இறுதிக்கட்ட விசாரணை தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வருகிறது. 

அந்த விசாரணையில், தினகரன் தரப்பில் மூத்த வழக்கறிஞரும் முன்னாள் சட்ட அமைச்சருமான அஷ்வினி குமார் ஆஜராகி வந்தார். 

தேர்தல் ஆணையத்தில் நடைபெற்ற விசாரணையின்போது தினகரன் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதம்;

எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தரப்பில் செப்டம்பர் 29-ம் தேதிக்கு முன்பாகத் தாக்கல்செய்யப்பட்ட ஆவணங்களை மட்டுமே கருத்தில்கொள்ள வேண்டும். சின்னம் தொடர்பாக எதிர்த்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் குளறுபடிகள் உள்ளன. அவற்றை ஆதாரபூர்வமாக நிரூபிக்கத் தயார். நிர்வாகிகளைக் கட்டாயப்படுத்தி, கையெழுத்திடச் செய்துள்ளனர். அவர்கள் தரப்பில் தாக்கல் செய்த ஆவணங்களின் உண்மைத்தன்மையை சோதித்துப்பார்க்க கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும். கட்சியின் பொதுச் செயலாளரைப் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்வுசெய்ய முடியாது என்று தினகரன் தரப்பில் வாதிடப்பட்டது.

அதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில், பிரமாணப் பத்திரங்கள் தாக்கல்செய்த யாரையும் நேரில் அழைத்து விசாரிக்க முடியாது. எழுத்துபூர்வமாக உங்கள் தரப்பு வாதங்களைத் தாக்கல்செய்ய வேண்டும் என்று தினகரன் தரப்பின் கோரிக்கையை நிராகரித்தனர். அதன் பின்னர், வரும் 23-ம் தேதி, மூன்றாம் கட்ட விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மூன்றாம் கட்ட விசாரணையின்போது தினகரன் தரப்பில் வழக்கறிஞர் அபிஷேக் மனு ஆஜராக உள்ளதாகவும், விசாரணை அன்று அவருக்கு மற்றொரு வழக்கு இருப்பதால், 3 மணிக்கு நிர்ணயிக்கப்பட்ட விசாரணையை 4.15 மணிக்கு வைத்துக்கொள்ளக் கோரி, தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. ஆனால், விசாரணை நேரத்தை ஒத்திவைக்க இயலாது என தினகரன் தரப்பு கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது.

இரட்டை இலை சின்னத்தை பெற கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கேட்ட தினகரன் கோரிக்கையையும் ஏற்கனவே தேர்தல் ஆணையம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.