election commission defeated in rk nagar by poll said stalin
ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவைத் தடுக்க தவறிய தேர்தல் ஆணையம் தான் தோற்றுவிட்டது என திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
கடந்த 21ம் தேதி நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று 19 சுற்றுகளாக நடைபெற்றது. அனைத்து சுற்றுகளிலும் முன்னிலை வகித்த தினகரன், மதுசூதனனை விட 40707 வாக்குகள் அதிகம் பெற்று அபார வெற்றி பெற்றார். திமுக சார்பில் போட்டியிட்ட மருதுகணேஷ், மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டதுடன், டெபாசிட் கூட வாங்கவில்லை.
பிரதான எதிர்க்கட்சியாக திகழும் திமுக, ஆர்.கே.நகரில் படுதோல்வியை சந்தித்தது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தினகரனிடம் தோல்வியடைந்த அதிமுக கூட, திமுக தோல்வியில் குளிர்காய்கின்றனர்.
இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையமும் காவல்துறையும் தோற்றுவிட்டது. தினகரன் பணப்பட்டுவாடா செய்வதற்கு சில அமைச்சர்களே துணை நின்றார்கள் என்ற தகவல் எனக்கு வந்துள்ளது. ஆனால், திமுக நேர்மையாக இந்த தேர்தலை சந்தித்தது. பணப்பட்டுவாடாவைத் தடுக்க தவறிய தேர்தல் ஆணையம்தான் இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளது என ஸ்டாலின் விமர்சித்தார்.
