தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளில் நாளை மாலை 5 மணிக்கு மேல் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் மூலம் பிரசாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு வரும் 19-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். 17-ம் தேதி மாலை 5 மணி முதல் வாக்குப் பதிவுகள் முடிவடையும் வரையில் 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126-ன் கீழ், பின்வரும் விதிமுறைகள் செயலில் இருக்கும்.

தேர்தல் தொடர்பான யாதொரு பொதுக் கூட்டத்தையோ ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ அல்லது அவற்றில் பங்கேற்கவோ கூடாது.

யாதொரு தேர்தல் விவகாரத்தையும், திரைப்படம், தொலைக்காட்சி, எஃப்.எம். ரேடியோ, வாட்ஸ்அப், முகநூல், ட்விட்டர் அல்லது இது போன்ற சாதனம் வாயிலாகப் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கக் கூடாது. 

குறுஞ்செய்தி மற்றும் இணையம் உட்பட அனைத்து மின்னணு வடிவிலான தகவல் தொடர்பையும் இது உள்ளடக்கும். பொது மக்களில் எந்தவொரு நபரையும் ஈர்க்கிற வகையில், யாதொரு இசை நிகழ்ச்சி அல்லது யாதொரு திரையரங்கச் செயல்பாடு அல்லது எவ்வித ஏதேனும் பிற கேளிக்கை அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்த அல்லது ஏற்பாடு செய்வதன் மூலம் அங்குள்ள பொதுமக்களிடம் யாதொரு தேர்தல் விவகாரத்தையும் யாதொரு நபரும் பரப்புரை செய்யக் கூடாது. 

இந்த விதிமுறை மற்றும் மேற்கண்ட இரண்டு விதிமுறைகள் எவ்விதத்தில் மீறப்பட்டாலும் 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்பிரிவு 126 (2)-ன்படி, 2 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இவையிரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

தொகுதி வெளியே இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் முதலியோர் மற்றும் அத்தொகுதியின் வாக்காளர்கள் அல்லாதோர் வரும் 17-ம் தேதி மாலை 5 மணிக்கு மேல் அந்தத் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.

கல்யாண மண்டபம், சமுதாயக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெளியாட்கள் யாரேனும் தங்கியுள்ளனரா என்பதை கண்டறியப்படும். வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உட்பட வாகன அனுமதிகள், 17.11.2016 அன்று மாலை 5 மணி முதல் செயல்திறனற்றதாகிவிடும்.