விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்தின் உயர்மட்டக்குழு வரும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கை களை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே தமிழகத்தில் 2021க்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார்படுத்துவது, சமூக இடைவெளியை காக்க வாக்குச்சாவடிகளில்  வாக்காளர்களின் எண்ணிக்கையை குறைத்து வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது உள்ளிட்ட பணிகள் பற்றி தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உயர் அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தி வருகிறார். 

தமிழகத்தில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் முதற் கட்டமாக இந்திய தேர்தல் ஆணையம் தமிழகம் வந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக கடந்த வாரம் அறிவிப்பு வெளியானது.  சட்டம் ஒழுங்கு பிரச்சினை இல்லாத நிலையில் தான் தேர்தலை சுமூகமாக நடத்த முடியும் எனவே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை, பொது பிரச்சினை, தேர்தல் தயார்நிலை, அரசியல் கட்சிகளின் தேர்தல் தொடர்பான கோரிக்கைகள், கருத்துக்கள் ஆகியவற்றை அறிய தமிழகத்திற்கு  உயர்மட்ட குழு இந்திய இந்திய தேர்தல் ஆணையத்தின் பொதுச்செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையில் இன்று வருகை தர உள்ளது. 

துணைத் தேர்தல் ஆணையர் சுதீப் ஜெயின், ஆஷிஷ்  குந்த்ரா, பீகார் தலைமை தேர்தல் அதிகாரி எச்.ஆர் சீனிவாசா, தேர்தல் ஆணைய இயக்குனர் பங்கஜ் ஸ்ரீவத்சவா,  தேர்தல் ஆணைய செயலாளர் மலையாய் மாலிக் ஆகியோர் இன்று  டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வருகின்றனர். தமிழக தலைமை தேர்தல்  அதிகாரி சத்யபிரதா சாகு விமான நிலையம் சென்று வரவேற்கிறார். பின்னர் இந்த குழு கிண்டியில் உள்ள ஐடிசி சோழா ஹோட்டலுக்கு செல்கின்றனர். அங்கு பகல் 12 மணி அளவில் அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளை அழைத்து ஆலோசனை நடத்துகின்றனர். வரும் ஏப்ரல் மாதம் தமிழகத்தில் தேர்தலை ஒரே கட்டமாக நடத்துவதா? அல்லது இரண்டு கட்டமாக நடத்தலாமா? என்பது பற்றி ஒவ்வொரு பிரதிநிதிகளிடம் தனித்தனியாக கருத்து கேட்க உள்ளனர். 

ஒவ்வொரு கட்சி பிரதிநிதிகளையும் தனித்தனியாக சந்தித்து அவர்கள் மனுக்களை பெற உள்ளனர். அதைத்தொடர்ந்து அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். அதேபோல் வருமானவரித்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், போலீஸ் டிஜிபி, சென்னை காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். தேர்தல் வரவுள்ள நிலையில் மாநில அரசு மேற்கொள்ள உள்ள தயார் நிலை குறித்தும் இந்த கூட்டத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.