கடந்த ஒன்றரை மாதத்துக்கு மேலாக அதிமுகவில் நீடித்து வந்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் இன்று அறிவித்தார். மேலும் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவும் கட்சிக்கு அறிவிக்கப்பட்டது.


இந்நிலையில் முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவித்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை கிரீன்வேயிஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்துக்கு வருகை புரிந்தார். அப்போது ஓ. பன்னீர்செல்வத்தின் மகன் எம்.பி. ரவீந்திரநாத் எடப்பாடி பழனிசாமியின் காலில் விழுந்து ஆசி பெற்றார். ஓ. பன்னீர்செல்வம் பூங்கொத்து கொடுத்து எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்றார். பின்னர் ஓபிஎஸுக்கு எடப்பாடி பழனிச்சாமி நன்றி தெரிவித்தார்.