தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி காமராஜர் அறக்கட்டளை மூலம் கல்வியில் கொள்ளையடித்ததாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் 2008ம் ஆண்டு கீரப்பாளையம், கடலூர் மாவட்டத்தில் கே.எஸ்.அழகிரி கல்வி அறக்கட்டளை , பெருந்தலைவர் காமராஜர் கடல் சார் அறிவியல் மற்றும் பொறியியல் கல்வி நிறுவனத்தை துவக்கியது. பல்வேறு கடல்சார்ந்த பாடத்திட்டங்களை பயிற்சியளித்து உரிய சான்றிதழை இந்த கல்வி நிறுவனம் வழங்க வேண்டும் என கப்பல்துறை மத்திய பொது இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது. இந்த அறக்கட்டளையின் அறங்ககாவலர்களாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரியும் அவருடைய குடும்பத்தாரும் மட்டுமே உள்ளனர்.

இந்நிலையில் 2019ம் ஆண்டு மே மாதம் 15ம் தேதி அலவலா விஷ்ணு வர்தன் என்ற மாணவர் இயக்குனரகத்துக்கு ஒரு புகாரை கொடுத்துள்ளார். TMC Shipping Private Limited என்ற நிறுவனத்தில் (பதிவு எண் : RPSL-MUM-423 இந்திய கப்பல் துறை இயக்குநரகத்தின் அனுமதி பெற்றது) இந்திய தேசிய மாலுமிகள் தரவு தளம் எண் (INDoS ) l8ZL4l78 ன் படி கடல்சார் பொறியியல் பட்டப்படிப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டதாவும், அதற்கான கட்டணம் மற்றும் வேலை வாய்ப்பு உறுதிக்காக ரூபாய் 6.5 லட்சம் செலுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த நிறுவனத்தின் மூலம், அடிப்படை பாதுகாப்பு பயிற்சி மற்றும் மாலுமிகளுக்கான பாதுகாப்பு பயிற்சி மற்றும் பாதுகாப்பு கடமைகள் குறித்த பயிற்சியை பெறுவதற்கு தான் கடலூர் மாவட்டத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் கடல் சார் அறிவியல் மற்றும் பொறியியல் கல்வி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டதாவும் தெரிவித்துள்ளார்.

இந்த கல்வி நிறுவனத்திற்கு தான் ஒரே ஒரு நாள் மட்டும் சென்றதாகவும் அன்று தன்னிடம் கையழுத்தை பெற்று கொண்டதாகவும், வகுப்புகள் எதுவும் நடத்தப்படவில்லை எனவும், ஆனால், இரு பாடங்களிலும் தேர்வு பெற்றதற்கான சான்றிதழ்களை முறையே 20/06/2018 மற்றும் 22/06/2018 தேதிகளில் கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த சான்றிதழ்களில் அவரின் கையெழுத்து இல்லை என்றும், முதல்வர் காஞ்சனா அழகிரி மற்றும் துறை தலைவரின் கையொப்பம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த கல்வி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பதிவு, முதல்வர் இல்லை எனவும், மேலும் ஒரே ஒரு ஆசிரியரும், இரு பயிற்றுவிப்பாளர்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கிறது. அதனடிப்படையில், முறையான பயிற்சி அளிக்கும் ஆசிரியர்களோ, பயிற்சியாளர்களோ இல்லை என்பதை அந்த கல்வி நிறுவனமே தெளிவுபடுத்துகிறது. மேலும் 01/03/2019 முதல் 30/04/2019 வரை 760 மாணவர்களுக்கு அடிப்படை பாதுகாப்பு பயிற்சி வகுப்பு எடுக்கப்பட்டுள்ளதாகவும், 695 மாணவர்களுக்கு மாலுமிகளுக்கான பாதுகாப்பு பயிற்சி மற்றும் பாதுகாப்பு கடமைகள் குறித்த பயிற்சி வகுப்பு எடுக்கப்பட்டதாகவும் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான எந்த தகுதியோ, வாய்ப்போ அந்த கல்வி நிறுவனத்திற்கு இல்லை என்பதும் எந்த விதமான பயிற்சியோ, தேர்வோ நடத்தாமலேயே சான்றிதழ்களை மாணவர்களுக்கு கொடுத்து மிக பெரிய மோசடியை செய்துள்ளது என்று தெளிவுபடுத்தியுள்ளது கப்பல்துறை மத்திய பொது இயக்குனரகம்.

அனுமதி பெறாத நிறுவனங்களுடன் தொடர்பு வைத்து கொண்டு, உரிய பயிற்சி கொடுக்காமலேயே சான்றிதழ் கொடுத்து, வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக கே.எஸ்.அழகிரி கல்வி அறக்கட்டளை, பெருந்தலைவர் காமராஜர் கடல் சார் அறிவியல் மற்றும் பொறியியல் கல்வி நிறுவனத்தின் மீது குற்றம்சாட்டி, 15 நாட்களில் உரிய விளக்கம் அளிக்குமாறும், தவறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காரணம் கேட்கும் குறிப்பாணையை 06/08/2019 அன்று அனுப்பி வைத்துள்ளது கப்பல்துறை மத்திய பொது இயக்குனரகம். அந்த கெடு முடிவடைந்த நிலையில், குற்றச்சாட்டுக்களுக்கு பதில் சொல்லியுள்ளதா அந்த கல்வி நிறுவனம் என்பது தெரியவில்லை.

ஆனால், எது எப்படி இருந்தாலும், இந்தியாவை 60 வருடங்கள் ஆட்சி புரிந்த ஒரு கட்சியின் மாநில தலைவரின் கல்வி நிறுவனம் இப்படிப்பட்ட தரம் தாழ்ந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது மிக கேவலமான கொடூரம். குறிப்பாக கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மோசடி, கபளீகரம் மற்றும் ஏமாற்று வேலையில் ஈடுபட்டு மாணவர்களின் வாழ்க்கையை சிதைத்திருப்பது மன்னிக்க முடியாத குற்றம். எத்தனையோ மோசடிப்பேர்வழிகள் இது போன்ற குற்றங்களில் ஈடுபட்டு தண்டிக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும், குடும்பத்தோடு இணைந்து இப்படிப்பட்ட செயலில் ஒரு அரசியல் தலைவர் செயல்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

பொறுப்புள்ள ஒரு அரசியல் தலைவராக கே.எஸ்.அழகிரி தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை பொய் என்று நிரூபிக்கும் வரை அந்த பதவியிலிருந்து விலகி நிற்பது அவருக்கு மேலும் இழுக்கை சேர்க்காது இருக்கும். பாரம்பரியமிக்க கட்சி என்று சொல்லிக்கொள்ளும் காங்கிரஸ் கட்சி, இவரை கட்சியின் மாநில தலைவர் பதவியில் நீட்டிக்க செய்வது அந்த கட்சிக்கு கேவலம் என்பதை உணர்ந்து கொண்டு செயல்பட வேண்டும். என எதிர்கட்சினர் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளனர்.