ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டையில் ஓய்வூதிய பலன்களை பெற்றுத்தர 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கல்வித்துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டையில் உயிரிழந்த முன்னாள் அரசுப்பள்ளி தலைமையாசிரியர் ராமய்யா என்பவரின்  ஓய்வூதிய பண பலன்களை பெற்றுத்தர அவரது மகனிடம் 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கல்வித்துறை அதிகாரியை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

ஒசூரை சேர்ந்தவர் கிஷோர்குமார், இவருடைய தந்தை ராமய்யா, இவர் ஓசூர் அருகேயுள்ள அனுசோனை கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப பிரச்சனை காரணமாக அவர் உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்த முன்னாள் தலைமை ஆசிரியர் ராமையாவின் ஓய்வூதிய பண பலன்களை பெற அவரது மகன் கிஷோர்குமார் கெலமங்கலம் வட்டார கல்வி அலுவலகத்தில் அதிகாரிகளிடம் மனு வழங்கியுள்ளார். இதனைத்தொடர்ந்து கெலமங்கலம் வட்டார கல்வி அலுவலகத்தில் பணியாற்றி வந்த கண்காணிப்பாளர் பாலாஜி என்பவர் ராமைய்யாவின் ஓய்வூதிய பலன்களை பெற்றுத்தர அவரது மகன் கிஷோர்குமாரிடம் ரூபாய் 5 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். 

இதனை விரும்பாத கிஷோர்குமார் இதுகுறித்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கிருஷ்ணராஜன், இன்ஸ்பெக்டர் முருகன், ஆகியோர் இதுகுறித்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின்படி இன்று தேன்கனிக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்த பாலாஜியிடம் கிஷோர் குமார் இரசாயனம் தடவிய ரூபாய் 5 ஆயிரத்தை லஞ்சமாக கொடுத்துள்ளார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி அவரை மேற்படி நடவடிக்கைக்கு அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.