சட்டப்பேரவையில் என்னை பார்த்து சிரித்ததற்காக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் பதவியை பறித்தவர் சசிகலா என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு பகுதியில், இன்று திமுக சார்பில் நடைபெற்று வரும் மக்கள் கிராம சபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகையில்;- அதிமுக ஆட்சியில் கிராம சபை கூட்டங்கள் முறையாக நடைபெறவில்லை. இதனால் தான் திமுக சார்பில் கிராம சபை கூட்டங்கள் நடத்தி வருகிறோம். நாடாளுமன்ற தேர்தலில் 38 இடங்களை வென்று, நாடாளுமன்றத்தில் 3வது பெரிய கட்சியாக திமுக உள்ளது. 

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக அதிகாரத்தையும் தாண்டி திமுக பெரிய அளவில் வெற்றி பெற்றது. இன்னும் 4 மாதங்களில் தமிழகத்தில் மாற்றம் ஏற்படும். கடந்த தேர்தலில் 1.1 சதவீத ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் ஜெயலலிதா. சசிகலாவால் முதல்வராக நியமிக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. டெல்லியில் 38 நாள் விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால், அவர்களின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. அதிமுக அரசும் கண்முடித்தனமாக ஆதரவு தெரிவிக்கிறது. 

விவசாயிகளை வஞ்சித்திருக்கும் ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கிறது. வேலை இல்லா திண்டாட்டம், நாளுக்கு நாள் பெருகிக்கொண்டிருக்கிறது. சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக்கொண்டிருக்கிறது. கஜானாவை  காலி செய்து கிட்டத்தட்ட 6 லட்சம் கோடி ரூபாய் கடனில் தான் இந்த ஆட்சி போய்க்கொண்டிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்ததும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட பணி நாட்களை 150 நாட்களாக உயர்த்தவும், அன்றைய கூலியை அன்றே வழங்கவும் திமுக பரிசீலித்து வருகிறது. குறிப்பாக திமுக ஆட்சி அமைத்தால் மாணவர்களின் கல்விக்கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.