கர்நாடகத்தில், நீண்ட இழுபறிக்குப் பிறகு, 17 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டு, அவர்கள் கடந்த திங்கட்கிழமையன்று பதவியேற்றுக் கொண்டனர். இந்த  நிலையில், அமைச்சர் பதவி கிடைக்காத எம்எல்ஏ-க்களின் ஆதரவாளர்கள், எடியூரப்பாவுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

குறிப்பாக, பாஜக எம்எல்ஏ திப்பாரெட்டியின் ஆதரவாளர்கள், ஆங்காங்கே வாகனங்களின் டயர்களைக் கொளுத்திஎதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். சித்ரா துர்கா தொகுதி பாஜக எம்எல்ஏ திப்பாரெட்டி, ‘என்னுடைய அனுபவத்தைக் கட்சி கணக்கில் கொள்ளவில்லை’ என்று புலம்பியுள்ளார். 

இதேபோல, தலித் தலைவரும் 6 முறையாக எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவருமான அங்காராவும், “கட்சி மீது இருந்த என்னுடைய ஈடுபாடும், கொள்கையும் தலைமையால் மதிக்கப்படவில்லை” என்று அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். 

மற்றொரு பாஜக எம்எல்ஏ, ஹூளிகாட்டி சேகரும், ‘எனக்கும் மற்றும் சிலருக்கும் அநீதி நடைபெற்றுள்ளது. என்னுடைய மாவட்டம் கட்சித் தலைமையால் நிராகரிக்கப்படுகிறது’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்ந்து பாஜக எம்எல்ஏக்கள் அமைச்சர் பதவி கிடைக்காததால் எதிர்ப்பு காட்டி வருகின்றனர். இந்த எதிர்ப்பு வலுத்துவிடுமோ என எயூரப்பா அச்சத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.