உள்ளாட்சித் தேர்தல் இடப்பங்கீட்டில் கூட்டணி காட்சிகள் காட்டிய பிடிவாதம் எடப்பாடியாரை டென்சனாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிகவை தவிர்த்து மற்ற அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் அதிமுக மிகவும் தாராளம் காட்டியது. இதனால் ஏற்பட்ட திருப்தி இடைத்தேர்தலில் அந்த கூட்டணி கட்சிகள் அதிமுகவிற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க உதவியது. மேலும் இடைத்தேர்தலிலும் அதிமுக மகத்தான வெற்றி பெற்று தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. இந்த சூட்டோடு சூடாக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை போலவே உள்ளாட்சித் தேர்தலிலும் கூட்டணி கட்சிகளுக்கு தாராளம் காட்டும்படி மாவட்டச் செயலாளர்களுக்கு அதிமுக தலைமை உத்தரவிட்டிருந்தது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு கட்சிக்கும் அந்த கட்சியின் லோக்கல் செல்வாக்கிற்கு ஏற்ப இடங்களை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் பங்கிட்டனர். ஆனால் அதனை ஏற்க கூட்டணி கட்சிகள் மறுப்பு தெரிவித்த காரணத்தினால் பஞ்சாயத்து சென்னை வரை சென்றது.

பாஜக., பா.மக., தேமுதிக ஆகிய மூன்று கட்சிகளும் அதிமுகவிற்கு இணையான இடங்களை கேட்டு கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். அவர்கள் கேட்டதை கொடுத்தால் ஒரு சில மாவட்டங்களில் அதிமுக போட்டியிட இடங்களே இருக்காது. இந்த தகவல் கிடைத்த பிறகு எடப்பாடியாரே நேரடியாக மூன்று கட்சிகளின் தலைமையிடமும் பேசியதாக சொல்கிறார்கள். மிகவும் தாரளமாகவே இடத்தை ஒதுக்கியுள்ளோம், பெற்றுக் கொண்டு தேர்தல் பணிகளை தொடருங்கள் என்கிற ரீதியில் திட்டவட்டமாக அவர் கூறிவிட்டதாகவும் சொல்கிறார்கள்.

ஆனால் லோக்கர் கட்சி புள்ளிகள் தங்களுக்கு அந்த ஒன்றியத்தில் அதிக செல்வாக்கு, இந்த மாவட்ட பஞ்சாயத்தில் நாம் அதிக தொண்டர்களை வைத்துள்ளோம் என்று மேலிடத்தை குழப்பி வருகிறார்களாம்.  இதனால் வேட்பு மனு தாக்கல் தொடங்கிய இரண்டு நாட்கள் ஆகியும் கூட்டணி உடன்பாடு ஏற்படவில்லை. அதே சமயம் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் வேட்பு மனு தாக்கலை தீவிரப்படுத்தியுள்ளனர்.