முதலமைச்சர் பதவி நாங்கள் போட்ட பிச்சை என்கிற ரீதியில் பேசிய கருணாஸ் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று  கொங்கு மண்டலத்தின் பிரதான சமுதாய அ.தி.மு.க பிரமுகர்களும்,   சமுதாய அமைப்புகளும் வலியுறுத்திய நிலையில் அவர்களை சற்று அமைதியாக இருக்கும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த புதனன்று கருணாஸ் பேசிய பேச்சு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானதும்  கொங்கு மண்டலத்தின் முக்கிய  சமுதாயத்தை சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக நியுஸ் சேனல்களை பார்க்குமாறு கூறியுள்ளார். அதன்படி செய்தி சேனல்களை பார்த்த போது, கருணாஸ் பேசிய பேச்சுகள் ஒளிபரப்பாகியுள்ளன. அதிலும் நான் அடிப்பேன் என்று முதலமைச்சரே பயப்படுவார் என்று கருணாஸ் கூறியதை கேட்டதும் எடப்பாடி வாய்விட்டு சிரித்தேவிட்டாராம்.


 
ஆனால் தனது ஜாதிப்பெருமைகளை பேசியபடியே முதலமைச்சர் ஆனதே சசிகலா போட்டது என்று கூறியதை கேட்ட போது எடப்பாடி பழனிசாமி முகம் மாறியுள்ளது. உடனடியாக கருணாஸ் என்னென்ன பேசினார் என்கிற முழு விவரத்தை எடப்பாடியார் கேட்டுள்ளார். ஆனால் அதற்குள் அவரது சமுதாய தலைவர்களும், எம்.எல்.ஏக்களும் வரிசையாக முதலமைச்சர் அலுவலகத்தை தொடர்பு கொண்டுள்ளனர். உடனடியாக கருணாசை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால் இந்த சமயத்தில் கருணாசை கைது செய்தால்  தனது சமுதாயத்தால் பேசியதால் கோபத்தில்  எடப்பாடி உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார் என்கிற ஒரு பேச்சு வரும், மேலும் இந்த வழக்குகளில் கைது செய்தால் கருணாஸ் அவரது சமுதாய மக்கள் மத்தியில் ஹீரோ ஆகிவிடுவார் என்று எடப்பாடி கூறியுள்ளார். மேலும் தற்போதைக்கு வழக்கு தொடர்ந்து கருணாசை விரட்டினால் போதும் என்று போலீசாருக்கு தகவல் சென்றுள்ளது.


   
அதே சமயம் கருணாஸ் மீது வேறு ஏதேனும் விவகாரமான வழக்குகள் ஏதும் இருக்கிறதா என்று முதலமைச்சர் அலுவலகம் காவல்துறையிடம் கேட்டுள்ளது. அதிலும் கருணாஸ் சினிமாகாரர் என்பதால் அந்த மாதிரியான வழக்குகள் நிலுவையில் உள்ளதா அல்லது புகார் உள்ளதா என விசாரிக்கும்படி உளவுத்துறைக்கும் ஆணை சென்றுள்ளது. இந்த பரபரப்பு அடங்கிய பிறகு வேறு ஒரு விவகாரமான வழக்கில் கருணாஸ் நிச்சயம் கைது செய்யப்படுவார் என்று தன்னிடம் கொந்தளித்தவர்களுக்கு எடப்பாடி பதில் சொல்லி வருவதாக கூறப்படுகிறது.