அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு இந்த ஆண்டே அமல்படுத்தப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் உறுதியளித்தார். 

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 113 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை நந்தனம் சிக்னல் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் ஜெயக்குமார்,  மா.பா.பாண்டியராஜன், ராஜேந்திர பாலாஜி, பெஞ்சமின்,சேவூர் ராமசந்திரன், எம்.சி.சம்பத் ஆகியார் மலர் தூவி மரியாதை  செலுத்தினர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது. முதலமைச்சர் அரசு பள்ளியில் படித்தவர் என்றும், எனவே மாணவர்களின் கஷ்டம் அவருக்கு தெரியும் எனவும் உள் ஒதுக்கீடு எனபது அவசியமானது,  சமூக நீதிக்கான மாநிலம் தமிழ்நாடு எனவே அது காக்கப்பட வேண்டும் என்பதற்காக, அரசிற்கு இருக்கும் அதிகாரத்திற்கு உட்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக கூறினார். 

மேலும், இந்திய அரசியலமைப்பு சட்டம் 162 இன் படி தான் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என கூறிய அவர்,  இதில் எந்த பிரச்சனையும் ஏற்படாது எனவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், 2014ல் திமுக தலைவர் மேயராக இருந்த போது சென்னையில் வெள்ளம் ஏற்பட்டது, அதை ஸ்டாலின் நேரில் சென்று  பார்வையிட்டாரா எனவும் கேள்வி எழுப்பினார். தமிழக அரசு 2014-ம் ஆண்டு பெரு மழையின் அடிப்படையில், வரும் காலத்தில் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதற்காக 4034 கோடி ரூபாய் மழை நீர் வடிக்கால்காக ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், மண்டலம் 14,15ல் 1243 கோடி ரூபாயில் பணிகள் நடந்து வருகிறது என்றார்.15 மண்டலங்களில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அமைச்சர்கள் அடங்கிய குழு ஆய்வு செய்து முதலமைச்சரிடம் அறிக்கை சமர்பித்திருப்பதாகவும் கூறினார். 

சென்னை மாநகராட்சியில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், ஒவ்வொரு மண்டலத்திலும் மரங்கள் விழுந்தால் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், 109 இடங்களில் படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது என்றும், 44 நடமாடும் மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், 13 இடங்களில் தான் மழை நீர் தேங்கியுள்ளது அதையும் முழுமையாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இந்த ஆண்டே உள் ஒதுக்கீடு அமல்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவே அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், 7.5% உள் ஒதுக்கீடு இந்த ஆண்டே அமல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் திட்டவட்டமாக கூறினார்.