திமுக என்பது கட்சி அல்ல அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி என அமைச்சர் சி.வி சண்முகம் கூறியுள்ளார். செஞ்சி கிழக்கு மேற்கு ஒன்றியம் மற்றும் நகர கழகம் சார்பில் ஒட்டம்பட்டு  சிறுணாம்பூண்டி, ஆலம்பூண்டி, கடலாடி குளம், செஞ்சி ஆகிய பகுதிகளில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக சட்டத்துறை அமைச்சரும், அதிமுக விழுப்புரம் மாவட்ட செயலாளருமான சி.வி சண்முகம் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- அதிமுக அரசு சிறப்பாக செயல்படுகிறது என்று பொதுமக்கள் மற்றும் அனைவராலும் பாராட்டப்படுகிறது. 

இன்றைக்கு இந்த நல்ல எண்ணத்தை பாசறை பொறுப்பாளர்கள் வாக்குகளாக  மாற்ற பாடுபட வேண்டும். பாசறையில் நிர்வாகிகளின் பங்கு இதில் மிகவும் முக்கியம். அம்மா அவர்கள் கூறியதைப் போல், தாலிக்கு தங்கம், மடிக்கணினி, இலவச அரிசி உள்ளிட்ட அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் திமுகவினர் 2 ஏக்கர் நிலம் தருவதாக கூறி மக்களை ஏமாற்றினர். நில அபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து, வசூல் வேட்டை ஆகியவைதான் திமுகவின் முக்கிய வேலையாக இருந்தது. கவர்ச்சியான திட்டங்களை அறிவித்து மக்களை திசை திருப்பினர். திமுக என்பது கட்சியே அல்ல அது கார்ப்பரேட் கம்பெனி. 

ஆனால் அதிமுக ஏழைகளின் கட்சியாகும், அதிமுக ஆட்சியில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டு வருகிறது. அடுத்த தலைமுறைக்கு கட்சியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல பாடுபடவேண்டும். அதற்கு தேவையான அனைத்தையும் நாங்கள் செய்து தருவோம். அம்மாவின் வழியில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பாக ஆட்சி செய்து ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகளை தமிழகத்திற்கு கொடுத்துள்ளனர். இந்தியாவின் கல்வி வளர்ச்சி 20%, ஆனால் ஆனால் தமிழ் நாட்டின் கல்வி வளர்ச்சி என்பது 50 சதவீதம். எனவே மூன்றாவது முறையாகவும் அதிமுக ஆட்சி அமைய இளைஞர் பாசறை நிர்வாகிகள் கடுமையாக பணியாற்றவேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.