பிரதமர் மோடியிடம் மண்டியிடுவதை விட கட்சி மாறுவதே மேல் என முதல்வர் எடப்பாடியை கரூர் மக்களவை தொகுதி வேட்பாளர் ஜோதிமணி கடுமையாக விமர்சித்துள்ளார். 

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர் உள்ளிட்ட 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அரசியல் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே அரவக்குறிச்சி போட்டியிடும் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜியை ஆதரித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

அப்போது அவர் பேசுகையில் கட்சி மாறுவது குறித்து பேச அதிமுகவினருக்கு எந்த அருகதையும் இல்லை. முதல்வராக எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் பாஜகவை தமிழகத்தில் காலூன்ற விடாமல் பார்த்து கொண்டனர். கடந்த மக்களவை தேர்தலில் மோடிக்கு சவால் விடுக்கும் வகையில் ஜெயலலிதா இருந்து வந்தார். ஜெயலலிதா எதிர்த்த திட்டங்களை எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் மோடிக்கு பயந்து அனுமதி அளித்துள்ளனர். மோடியிடம் மண்டியிட்டு அடிமையாக இருக்கும் அரசாங்கம்தான் இந்த எடப்பாடி அரசு என்றார்.

 

மேலும் அவர் பேசுகையில் ஏற்கெனவே 10 பேர் அவர்களுடன் அடிமையாக இருக்கும்போது 11-வது நபராக செந்தில் பாலாஜி இருக்க முடியாது என்பதற்காக கட்சி மாறி உள்ளார். தொடர்ந்து மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் திமுகவில் இணைந்து தேர்தலில் களம் காண்கிறார். கட்சி மாறுவது குறித்து பேசுவது மக்கள் பிரச்சனை அல்ல. பொதுமக்களின் பிரச்சனையே இங்கே பேசப்படவேண்டும் என முதல்வர் எடப்பாடியை ஜோதிமணி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.