பிசிராந்தையாரின் புறநானூற்றுப் பாடலை நிதிநிலை அறிக்கையில் மேற்கோள் காட்டி தமிழுக்கு பெருமை சேர்த்ததற்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி, பாராட்டுக்களை முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2019-2020 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் குறித்து  முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’பிசிராந்தையார் பாடிய புறநானூற்றுப் பாடலை நிதிநிலை அறிக்கையில் மேற்கோள் காட்டி தமிழுக்கு பெருமை சேர்த்ததற்கு தமிழக மக்கள் சார்பில் நன்றி, பாராட்டுக்கள். மத்திய பட்ஜெட், அனைத்து துறைகளிலும் நாடு மேலும் வளர்ச்சி பெறுவதற்கு உகந்த தொலைநோக்கு பார்வை கொண்டதாக உள்ளது. முன்னேற்றத்திற்கான கொள்கைகள், திட்டங்களோடு தாக்கல் செய்த பட்ஜெட்டை வரவேற்கிறேன்.

பாரத் மாலா திட்டத்தின் மூலம் சாலை கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான அறிவிப்பு தமிழகத்திற்கு பயனிளிக்கும். பொதுத்துறை நிறுவன பங்குகளை தனியாருக்கு விற்கும் போது மாநில அரசுடன் கலந்தாலோசிக்க வேண்டும். பல்வேறு வேளாண் திட்டங்களுக்கு கணிசமான நிதி ஒதுக்க வேண்டும். கோவை, மதுரை மாநகராட்சியில் புதிய மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2-வது கட்டப்பணிகளுக்குகான ஒப்புதலை விரைவுபடுத்த வேண்டும். சென்னை புறநகர் ரெயில்வே  சேவைகளை மேலும் மேம்படுத்த வேண்டும். மத்திய அரசின் வேளாண் அபிவிருத்தி திட்டங்களுக்கு கணிசமான அளவில் நிதி ஒதுக்கீடு உயர்த்தப்பட வேண்டும். கோதாவரி- வைகை- குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு நடப்பு கூட்டத்தொடரிலேயே நிதி ஒதுக்க வேண்டும். பட்ஜெட்டில் அறிவித்துள்ள பல்வேறு நீர்வள மேம்பாட்டுத்திட்டங்கள் பெரும் பயனளிக்கும்’’ என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.