edappadi yells at mla meeting

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் முதல்வராக பதவி ஏற்றார் எடப்பாடி.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நம்பிக்கை வாக்கெடுப்பின் போதே, சபாநாயகர் இருக்கை முற்றுகை, ஸ்டாலின் சட்டை கிழிப்பு என நெருக்கடி கொடுத்த திமுக, சபாநாயகர் மீது நம்பிக்க்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தும் தோற்றுப்போனது.

ஒரு எதிர் கட்சியாக திமுக செய்யும் அரசியல், முதல்வர் எடப்பாடியை பெரிதாக பாதிக்க வில்லை. 

ஆனால், ஆளும் கட்சியில் இருந்து கொண்டே அமைச்சர்களும், எம்.எல்.ஏ க்களும் கொடுக்கும் இடையூறு, அவரை தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருகிறது.

அதிமுகவில், 31 தலித் எம்.எல்.ஏ க்கள் இருந்தும், அமைச்சரவையில் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுக்கவில்லை. முக்கிய இலாகாவும் கொடுக்கவில்லை என, தலித் எம்.எல்.ஏ க்கள், தனியாக கூட்டம் போட்டு, சில நாட்களுக்கு முன் அவருக்கு நெருக்கடி கொடுத்தனர்.

அடுத்து, தங்களுக்கு 30 எம்.எல்.ஏ க்களின் ஆதரவு இருப்பதாக கூறி, செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாச்சலம், பழனியப்பன் ஆகிய முன்னாள் அமைச்சர்கள், தங்களுக்கு அமைச்சர் பதவி கேட்டு, முதல்வர் எடப்பாடிக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

அத்துடன், பெரும்பாலான எம்.எல்.ஏ க்கள் தொடர்ந்து எடப்பாடியிடம், அது வேண்டும், இது வேண்டும், இல்லையெனில் ஆதரவு கொடுக்க மாட்டோம் என அவ்வப்போது மிரட்டும் வகையில் நெருக்கடி கொடுத்து வருவது வாடிக்கையாகி விட்டது.

இதனால், பொறுத்து, பொறுத்து பார்த்த எடப்பாடி, ஒரு கட்டத்தில் பொங்கி எழ ஆரம்பித்து விட்டார். தற்போது திருப்பி தாக்கவும் ஆரம்பித்து விட்டார்.

தமிழகத்தின் உயர்ந்த பதவியான முதல்வர் பதவியில், மூன்று மாதத்திற்கு மேல் இருந்து விட்டேன். தமிழக அரசியல் வரலாற்றில் முதல்வர் வரிசையில் ஏன் பெயர் இடம் பெற்றுவிட்டது. பாட புத்தகத்திலும் என் பெயர் இடம் பெற்று விடும்.

முதல்வராக இருந்துதான், நான் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியமும் எனக்கு இல்லை. எனக்கு தேவையான அளவு சொத்து இருக்கிறது. எப்போது தேர்தல் வந்தாலும், வெற்றி பெரும் அளவுக்கு என்னால் செலவு செய்ய முடியும், இன்னும் சிலரையும் வெற்றி பெரும் அளவுக்கு செல்வு செய்யவும் முடியும்.

அதனால், உங்கள் மிரட்டலுக்கு எல்லாம் நான் அஞ்சமாட்டேன். எம்.எல்.ஏ தேர்தலுக்காக வாங்கிய கடனையே, இன்னும் பலர் அடைக்க முடியாமல் இருந்து வருகிறீர்கள்.

அதனால், முடிந்தவரை பயன்படுத்திக் கொண்டு, வாங்கிய கடனை அடைக்க முயற்சி செய்யுங்கள். என்னை தங்க முட்டையிடும் வாத்தாக கருதி, ஒரு நாளில் அறுக்க முற்பட்டால், உங்களுக்குதான் நஷ்டம். எனக்கு அதனால் எந்த பாதிப்பும் இல்லை.

எனவே, உங்கள் ஆதரவை வேண்டுமானால், நீங்கள் திரும்பப் பெற்று ஆட்சியை கவிழ்த்து விடுங்கள் என, அடாவடி எம்.எல்.ஏ க்கள் சிலரை அவர் நேரடியாகவே மிரட்டி விட்டார் என்கின்றனர் அதிமுகவினர்.

ஆட்சி கலைந்துவிட கூடாது என முதல்வர் அஞ்சுவார் என்று பார்த்தால், இப்படி திருப்பி அடிக்கிறாரே என்று திகைத்து போன எம்.எல்.ஏ க்கள், என்ன செய்வது? என்று தெரியாமல் தவித்து வருவதாக தகவல். 

பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. எனவே, பொறுமையை சோதித்தால் எடப்பாடி அல்ல, யாராக இருந்தாலும், ஒரு கட்டத்தில் பொங்கி எழத்தான் செய்யவார்கள் என்பதை அறிந்து, எம்.எல்.ஏ க்கள் கப்- சிப் என ஆகிவிட்டதாக தகவல்.