Edappadi will meet modi - said by MLA rajan

பாஸ்போர்ட்டில் இந்தி திணிக்கப்பட்டால் பிரதமர் மோடியை சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துவார் என மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.

மத்தியில் பாஜக ஆட்சி நிலைபெற்ற இந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தின் பல்வேறு பிரச்சனைகளை கண்டும் காணாததும் போலவே செயல்பட்டு வருகிறது.

ஆனால் ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்பு கொண்ட பாஜக அரசு இந்தி சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை திணிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது.

தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் தமிழர்கள் இந்தி கற்றுக் கொள்வது இன்றுவரை தொடர்கிறது. காரணம் இந்தி கற்று இருப்பவர்களுக்கு கூடுதல் இன்கிரிமென்ட் வழங்கபடுகிறது.

இதனிடையே தேசிய நெடுஞ்சாலை மைல் கற்களில் இடம், கி.மீ என்பதை ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியில் எழுதுவதற்கு தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்டம் தீட்டியது. இதற்கு பாஜக அரசும் சப்பை கட்டு கட்டியது.

இதையறிந்த தமிழக எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. இவ்வாறு ஒவ்வொரு வகையிலும் இந்தியை எப்படியாவது மக்களோடு மக்களாக கலந்திட வேண்டும் என மத்திய அரசு துடித்து வருகிறது.

இதைதொடர்ந்து, பாஸ்போர்ட்டில் ஆங்கில மொழியுடன் சேர்ந்து இந்தி மொழியும் இடம்பெறும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தி மொழி இந்தியர்களின் அடையாளம் எனவும், இதற்காக நாம் பெருமைப்பட வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா பாஸ்போர்ட்டில் இந்தி திணிக்கப்பட்டால் பிரதமர் மோடியை சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துவார் என தெரிவித்தார்.

மேலும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இந்தியை எதிர்கவும் இல்லை; இந்தி திணிப்பை விரும்பவும் இல்லை என கூறிய அவர், கல்விசாலைகளில் இந்தியைத் திணித்தால் அதை நிச்சயாமாக அதிமுக எதிர்க்கும் என குறிப்பிட்டார்.