எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாகை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தாழை சரவணனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில்  ஈடுபட்டார்.

அப்போது அங்கு  கூடியிருந்த பொதுமக்களிடம் பேசிய முதலமைச்சர், காவிரி பிரச்சனையில் தமிழக மக்களுக்கு திமுக துரோகம் செய்துவிட்டதாக கூறினார். காவிரி நதிநீர் தொடர்பான பிரச்சனையில் தீர்ப்பு வந்தும், அதை அரசிதழில் வெளியிட திமுக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை என குற்றம்சாட்டினார்.

அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 37 எம்.பி.க்களும் காவிரி நீர் பிரச்சனைக்காக  நாடாளுமன்றத்தில் வலுவாக குரல் கொடுத்தனர். தொடர்ந்து 23 நாட்களாக நாடாளுமன்றத்தை நடக்க விடாமல் முடக்கி வைத்தனர். அதனால்தான் காவிரி மேலாண்மை  வாரியம் அமைக்கப்பட்டது எனவும் எடப்பாடி தெரிவித்தார்.

இதே போல் திமுக தலைவர் ஸ்டாலின் தொடர்ந்து அரசு மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை கூறிவருகிறார். ஸ்டாலினும், திமுக தொண்டர்களும் பொய் குற்றச்சாட்டு கூறுவதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் ஸ்டாலின் கண்டிப்பாக ஜெயிலுக்குப் போக வேண்டியது வரும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்தார்.