முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், அதிமுக சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் என இரு அணிகளாக பிளவு பட்டுள்ளது.

இதனால், ஓ.பன்னீர்செல்வத்துக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் மனோஜ்பாண்டியன், மைத்ரேயன், அவை தலைவர் மதுசூதனன் உள்பட எம்எல்ஏக்கள், எம்பிக்கள் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதேபோல் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள எம்எல்ஏக்கள், கல்பாக்கம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இருதரப்பினரும் தங்களை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கவர்னரிடம் மனு கொடுத்துள்ளனர். ஆனால், இதுவரை தமிழகத்தில் ஆட்சி அமைப்பது யார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இதற்கிடையில், சொத்து குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் சசிகலா உள்பட 3 பேருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. அதன்படி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் நேற்று மாலை பெங்களூர் பார்ப்பன அக்ராஹரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

முன்னதாக, நேற்று முன்தினம் சசிகலா, கூவத்தூர் ரிசார்ட்டில் அவசர எம்எல்ஏக்கள் கூட்டம் நடத்தினார். அப்போது, அதிமுக சட்டமன்ற குழுத்தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்தார். அதே நேரத்தில அதிமுக துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரன் நியமிக்கப்பட்டார். இதைதொடர்ந்து ஆட்சியமைக்க ஆளுநரிடம் எடப்பாடி பழனிச்சாமி, கவர்னரிடம் உரிமை கோரினர்.

கடந்த 2011ம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, டி.டி.வி.தினகரனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கினார். அதன்பின், கட்சியில் காணாமல் இருந்த இவர், திடீரென கட்சியில் நுழைந்ததும், அவருக்கு துணை பொது செயலாளர் பதவி வழங்கப்பட்டதும், அதிமுக எம்எல்ஏக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.

இதனால், ரிசார்ட்டில் உள்ள அதிமுக எம்எல்ஏக்கள் மத்தியில் அதி ருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இதில், செங்கோட்டையனின் ஆதரவாளர்கள், நேரடியாகவே அவரிடம் வெளிப்படுத்தியதாகவும் அதிமுக மூத்த நிர்வாகிகள் கூறுகின்றனர்.

மேலும், நேற்று முன்தினம் இரவு சசிகலா போயஸ் கார்டன் சென்றார். அப்போது, அமைச்சர்கள் மற்றும் செங்கோட்டையன், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரும் அவருடன் சென்று ஆலோசனை நடத்தினர். பின்னர், அனைவரும் ரிசார்ட்டுக்கு திரும்பினர்.

அப்போது எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களுக்கும், செங்கோட்டையன் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கட்சிக்காக பல ஆண்டுகளாக உழைத்து ஜெயலலிதாவின் நம்பிக்கை பெற்ற செங்கோட்டையனுக்கு தலைமை பதவி கிடைக்கவில்லை என அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், இரவு முழுவதும் ரிசார்ட் பரபரப்பாக காணப்பட்டதாக கூறப்படுகிறது.

கோல்டன் பே ரிசார்ட்டில் தங்கியுள்ள பெண் எம்எல்ஏக்கள் உள்பட யாரும் விடிய விடிய தூக்கம் இல்லாமல் அச்சத்துடன் இருந்துள்ளனர். எம்எல்ஏக்கள் ஒருவித பதற்றத்துடன் காணப்பட்டனர்., சில பெண் எம்எல்ஏக்கள், ரிசார்ட்டில் இருந்து தப்பிக்க முயன்றுள்ளனர். ஆனால், அவர்களால் முடியவில்லை. தற்போது, கூவத்தூர் விடுதியில் 47 எம்எல்ஏக்கள் மட்டுமே தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அதே நேரத்தில், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செங்கோட்டையன், பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை. சில எம்எல்ஏக்கள் மட்டும் வந்து பேட்டி கொடுத்தனர். அதில், நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம். எங்களை யாரும் கடத்தி வரவில்லை. வீணாக வதந்தியை கிளப்புகின்றனர் என கூறினர்.